| ADDED : ஜூன் 04, 2024 04:57 AM
புதுச்சேரி- : புதுச்சேரியில் இருந்து இன்று முதல் ஓசூருக்கு மீண்டும் பி.ஆர்.டி.சி.,பஸ் தினசரி இயக்கப்படுகிறது.புதுச்சேரியில் இருந்து திண்டிவனம், செஞ்சி, திருவண்ணாமலை செங்கம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி வழியாக ஓசூர் செல்ல பழைய பி.ஆர்.டி.சி., பஸ் ஒன்று தினசரி இயக்கப்பட்டு வந்தது.ஆனால், 15 ஆண்டுகள் கடந்த பஸ்களை இயக்க கூடாது என்று மத்திய அரசு, மாநிலங்களுக்கு உத்தரவிட்டத்தை தொடர்ந்து ஓசூருக்கான வழித்தடத்தில் இயங்கி வந்த பி.ஆர்.டி.சி.,பஸ் சேவை கடந்த ஏப்ரல் 31ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.இன்று 4ம் தேதி முதல் புதிய பாடி கட்டிய பி.ஆர்.டி.சி., பஸ் ஒன்று மீண்டும் புதுச்சேரியில் இருந்து ஓசூருக்கு இயக்கப்படுகிறது. பயண கட்டணம் ரூ.250 ரூபாய் மட்டுமே. தினசரி மதியம் 12.30 மணிக்கு புதுச்சேரியில் இருந்து ஓசூருக்கு புறப்படும் பி.ஆர்.டி.சி., பஸ் இரவு 7 மணிக்கு ஓசூரை அடைக்கின்றது. பின் அன்றைய இரவு 9.00 மணிக்கு ஓசூரில் இருந்து புறப்படும் பஸ், புதுச்சேரியை மறுநாள் அதிகாலை 3 மணியளவில் வந்தடையும். இந்த பஸ்சில் பயணம் செய்ய பயணச்சீட்டு முன்பதிவு தற்போது இல்லை.விரைவில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பி.ஆர்.டி.சி., அதிகாரிகள் கூறும்போது, பல்வேறு வழித்தடங்களில் பி.ஆர்.டி.சி., பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.அடுத்து திண்டிவனம்-புதுச்சேரி வழித்தடத்தில் 2 பஸ்களும், புதுச்சேரி-விழுப்புரம் வழித்தடத்தில் 4 பஸ்களும், காரைக்கால்-மாயவரம் வழித்தடத்தில் 1 பஸ்கள் என விரைவில் 7 பி.ஆர்.டி.சி., பஸ்கள் மீண்டும் இயக்கப்பட உள்ளது என்று தெரிவித்தனர்.