| ADDED : ஜன 27, 2024 06:31 AM
புதுச்சேரி : இலவச லேப் டாப் வழங்க கோரி முன்னாள் மாணவர்கள், பள்ளி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால், பரபரப்பு நிலவியது.புதுச்சேரி பள்ளி கல்வித்துறை மூலம் அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழக்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.இதற்காக ரூ. 60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாமில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதற்கு, டெண்டர் விடப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, கடந்த 24ம் தேதி கதிர்காமம் அரசு பெண்கள் பள்ளியில், பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது.தொடர்ந்து, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 - 24ம் கல்வியாண்டில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் லேப்டாப் வழங்கப்படும் எனவும், 2022- 23ம் கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படாதது என, தகவல் வெளியானது.பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் தற்போது, கல்லுாரியில் முதலாமாண்டு படிக்கின்றனர். அவர்கள், லேப்டாப் வழங்கக் கோரி அண்ணா நகரில் உள்ள பள்ளி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு நிலவியது.