புதுச்சேரி : ஈரம் பவுண்டேஷன் நிறுவனர் ராஜேந்திரன் தனது தன்னார்வலர்களுடன் காங்., கட்சியில் இணைய முடிவு செய்துள்ளார். முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஈரம் பவுண்டேஷன் மூலம் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவிகள் உள்ளிட்ட சேவைகளை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது தன்னார்வலர்களுடன் காங்., கட்சியில் இணைய முடிவு செய்துள்ளார். அதற்கான அறிமுக கூட்டம் புதுச்சேரி தனியார் ஓட்டலில் நேற்றிரவு நடந்தது.கூட்டத்தில், ஈரம் பவுண்டேஷன் நிறுவனர் ராஜேந்திரன், காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., மாநில ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, ஈரம் பவுண்டேஷன் நிறுவனர் ராஜேந்திரன் கூறுகையில், 'ராகுல் எம்.பி., கரத்தை பலப்படுத்துவதற்காக காங்., கட்சியில் இணைய முடிவு செய்துள்ளேன். வரும் லோக்சபா தேர்தலில் புதுச்சேரியில் காங்., வேட்பாளர் வெற்றி பெற, எனது தொகுதியில் கூடுதலாக 5,000 ஓட்டுகள் பெற்று தருவேன்.மேலும் தொகுதி வாரியாக உள்ள தனது நிறுவன தன்னார்வலர்கள் மூலம் காங்., கட்சி பலத்தை அதிகப்படுத்துவேன் என்றார்.தொடர்ந்து வைத்திலிங்கம் எம்.பி., கூறுகையில், 'இம்மாத இறுதியில் புதுச்சேரி வரும் காங்., பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் முன்னிலையில், ஈரம் பவுண்டேஷன் நிறுவனர் ராஜேந்திரன் தனது தன்னார்வலர்கள் 2,000 பேருடன் காங்., கட்சியில் இணையும் விழா நடத்தப்படும் என, தெரிவித்தார்.