புதுச்சேரி: தனியார் மருத்துவ கல்லுாரிகளுடன் விரைவாக பேச்சுவார்த்தை நடத்தி, அரசு ஒதுக்கீட்டுஇடங்களை இறுதி செய்ய வேண்டும்.புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் முதலாமாண்டில் காலியாக உள்ள எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு நேற்றுமுன்தினம் முதல் சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பம் வரவேற்கப்பட்டு வருகின்றன. முதல் நாளே ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பிக்க ஆர்வம் காட்டினர். இதனால் பொதுசேவை மையங்கள் நிரம்பி வழிந்தன. மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் சென்டாக் விரைவாக துவங்கியுள்ள போதிலும், தனியார் மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., சீட்டுகள் இறுதி செய்யப்படவில்லை. இதற்கான பேச்சுவார்த்தையும் இன்னும் துவங்கவில்லை.பெரிய மாநிலமான தமிழகத்திலேயே ஆண்டுதோறும் எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை திட்டமிட்டப்படி துவங்கி விடுகிறது. ஆனால் புதுச்சேரியில் மொத்தமே மூன்று தனியார் மருத்துவ கல்லுாரிகளிடமிருந்து தான் எம்.பி.பி.எஸ்.,சீட்டுகள் அரசு ஒதுக்கீடாக பெறப்படுகின்றன. ஆனால், ஒவ்வொரு கடைசி நேரத்தில் தான் அரசு ஒதுக்கீட்டிற்கு பேச்சுவார்த்தை நடக்கின்றது. இது சென்டாக் கவுன்சிலிங்கில் தேவையற்ற காலதாமதம் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது.எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங்கை பொருத்ததே மற்ற படிப்புகளுக்கு வழிகள் பிறக்கின்றன. கவுன்சிலிங்கில் இடங்கள் நிரம்புகின்றன. எம்.பி.பி.எஸ்., சீட் கிடைக்காவிட்டால் அடுத்து இன்ஜினியரிங் படிப்புகள் பக்கம் மாணவர்கள் செல்கின்றனர். காலத்தோடு விண்ணப்பம் பெற்ற பிறகு கூட எம்.பி.பி.எஸ்., கலந்தாய்விற்காக, பி.பார்ம் படிப்பிற்கு இதுவரை முதற்கட்ட கலந்தாய்வு நடத்தப்படவில்லை. பி.பார்ம் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங் எப்போது முடியும் என்று காத்திருக்கின்றனர். எனவே மருத்துவ கலந்தாய்வினை விரைவாக முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்தாண்டு தேசிய கலந்தாய்வு கமிட்டி இன்னும் கவுன்சிலிங் அட்டவணை, கட் ஆப் அறிவிக்கவில்லை என அடுக்கடுக்காக காரணங்களை கூறி ஜவ்வாக மருத்துவ கவுன்சிலிங்கை இழுக்காமல், தனியார் மருத்துவ கல்லுாரி நிர்வாகங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அரசு ஒதுக்கீட்டு இடங்களை இறுதி செய்ய வேண்டும் என்பதே மாணவர்கள், பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அரசு ஒதுக்கீடு எவ்வளவு
புதுச்சேரி அரசு மருத்துவ கல்லுாரியில் 131 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்படுகின்றன. இதுமட்டுமின்றி மூன்று தனியார் மருத்துவ கல்லுாரியில் 239 எம்.பி.பி.எஸ்.,சீட்டுகள் கடந்தாண்டு அரசு ஒதுக்கீட்டு இடங்களாக பெறப்பட்டன. இதன் மூலம் 370 எம்.பி.பி.எஸ்.,சீட்டுகள் கடந்தாண்டு அரசு ஒதுக்கீடங்களாக நிரப்பப்பட்டன. 3 தனியார் மருத்துவ கல்லுாரிகளில் மொத்தம் 650 எம்.பி.பி.எஸ்., சீட்டுகள் உள்ளன. இந்தாண்டு இப்போதே தனியார் மருத்துவ கல்லுாரிகளிடம் பேச்சுவார்த்தை துவங்கி,50 சதவீத இடங்களை பெற முனைப்பு காட்ட வேண்டும்.