| ADDED : ஜூன் 18, 2024 11:12 PM
டசல்டார்ப்: 'யூரோ' கோப்பை லீக் போட்டியில் பிரான்ஸ் அணி 1-0 என ஆஸ்திரியாவை வீழ்த்தியது. பிரான்ஸ் கேப்டன் எம்பாப்வேக்கு மூக்கில் அடிபட்டு ரத்தம் கொட்டியதால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.ஜெர்மனியில் 'யூரோ' கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. 'டி' பிரிவு லீக் போட்டியில் பிரான்ஸ், ஆஸ்திரிய அணிகள் மோதின. பிரான்ஸ் அணி கேப்டனாக களமிறங்கிய நட்சத்திர வீரர் எம்பாப்வே, துடிப்பாக ஆடினார். பந்து பெரும்பாலும் பிரான்ஸ் வசம் தான் இருந்தது.'சேம் சைடு கோல்'ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் 'பெனால்டி பாக்ஸ்' பகுதியில் பந்தை பெற்ற எம்பாப்வே, கோல் அடிக்க பார்த்தார். இதை தலையால் முட்டி தடுக்க முயற்சித்தார் ஆஸ்திரியாவின் மேஸ்மில்லியன் வோபர். ஆனால், துரதிருஷ்டவசமாக பந்து வளைக்குள் சென்று, 'சேம் சைடு கோலாக' மாறியது. இதனால் ஆஸ்திரிய அணியினர் நொந்து போயினர். தங்களுக்கு அதிர்ஷ்டமாக கோல் அமைந்ததால், பிரான்ஸ் வீரர்கள் உற்சாகமடைந்தனர். முதல் பாதி முடிவில் பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது.மோதியதில் காயம்இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் ஏனோதானோ என விளையாடினர். ஒரு கட்டத்தில் பிரான்ஸ் அணி தற்காப்பு ஆட்டத்திற்கு மாறியது. 86வது நிமிடத்தில் 'பிரீ கிக்' வாய்ப்பில் சக வீரர் கிரீஸ்மென் அடித்த பந்தை நல்ல உயரத்தில் குதித்து தலையால் தட்டிச் செல்ல பார்த்தார் எம்பாப்வே. அப்போது எதிர்பாராதவிதமாக ஆஸ்திரிய தற்காப்பு பகுதி வீரர் கெவின் டான்சோ முதுகு பகுதியில் மோதினார். அப்போது எம்பாப்வே மூக்கில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. சிறிது நேர சிகிச்சைக்கு பிறகு விளையாடினார். பின் முகத்தில் கை வைத்தவாறு மைதானத்தில் அமர்ந்தார். இவர் வேண்டுமென்றே நேரத்தை வீணடிப்பதாக ஆஸ்திரிய ரசிகர்கள் புகார் கூறினர். விசில் சத்தம் பறக்க, எதிர்ப்பு கோஷம் எழுப்பினர். எம்பாப்வேக்கு மஞ்சள் அட்டை காண்பித்து நடுவர் எச்சரித்தார். 90வது நிமிடத்தில் எம்பாப்வேக்கு பதில் ஆலிவியர் ஜிரூட் களமிறக்கப்பட்டார். இறுதியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.மீண்டும் வருவாராமூக்கில் காயமடைந்த எம்பாப்வே, போட்டி முடிந்ததும் மருத்துவமனைக்கு சென்றார். பரிசோதனையில் மூக்கில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிந்தது. இதற்கு 'ஆப்பரேஷன்' தேவைப்படாது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக முகத்தில் 'மாஸ்க்' அணிந்து விளையாடலாம். இருப்பினும் வரும் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம். தனக்கு பொருத்தமான 'மாஸ்க்' பரிந்துரை செய்யும்படி 'எக்ஸ்' சமூகவலைதளத்தில் எம்பாப்வே கேட்டுக் கொண்டார். இதை 3.8 கோடி பேர் பார்த்துள்ளனர். 'காமிக்' கதாபாத்திரமான 'நின்ஜா டர்டில்' உட்பட பல்வேறு வகையான 'மாஸ்க்'களை ரசிகர்கள் அனுப்பி வருகின்றனர்.பிரான்ஸ் பயிற்சியாளர் டிடியர் டிஷாம்ப்ஸ் கூறுகையில்,''எம்பாப்வேக்கு மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். போட்டிகளில் பங்கேற்பது பற்றி உறுதியாக எதுவும் கூற இயலாது,'' என்றார்.100ஆஸ்திரியாவை வென்றதன் மூலம், பிரான்ஸ் அணி பயிற்சியாளராக 100வது வெற்றியை பதிவு செய்தார் டிடியர் டிஷாம்ப்ஸ்.மன்னிப்புஆஸ்திரிய வீரர் கெவின் டான்சோ வெளியிட்ட செய்தியில்,'போட்டியில் இருவரும் மோதிக் கொண்டதில் எம்பாப்வேக்கு மூக்கில் காயம் ஏற்பட்டது. இதற்காக பிரான்ஸ் ரசிகர்களிடம் 'சாரி' கேட்கிறேன். விரைவில் குணமடைந்து, மீண்டும் யூரோ கோப்பை தொடரில் களமிறங்க வேண்டும்,' என தெரிவித்துள்ளார்.இது சரியாஅயர்லாந்து கால்பந்து ஜாம்பவான் ராய் கியான் கூறுகையில்,''சிகிச்சைக்கு பின் களமிறங்கிய எம்பாப்வே தேவையில்லாமல் மைதானத்தில் அமர்ந்து நேரத்தை வீணடித்தார். இது விளையாட்டு உணர்வுக்கு எதிரானது. இவருக்கு மஞ்சள் அட்டை காண்பித்து எச்சரித்தது சரியான நடவடிக்கை,''என்றார்.