உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ரூ.6 கோடியில் திருமண மண்டபம்

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ரூ.6 கோடியில் திருமண மண்டபம்

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், பிரசாத கடை, வாகன நிறுத்தம், அர்ச்சனை, அபிஷேகம், காது குத்துதல், மொட்டை அடித்தல் என, பல கட்டணங்கள் வாயிலாக, ஆண்டுதோறும் 6 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது.தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள், வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக இரவு தங்குகின்றனர்.அதேபோல், கந்தசுவாமி கோவிலில் திருமணம் செய்ய வேண்டுதல் இருப்பதாலும், போக்குவரத்து வசதி இருப்பதாலும், திருப்போரூர் பகுதியில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இதனால், இப்பகுதியில் முகூர்த்த நாட்களில், ஏராளமான திருமணங்களும் நடக்கின்றன. கோவில் சார்ந்து தங்குவோருக்கு தங்கும் விடுதிகள், திருமணம் நடத்த மண்டபங்கள் இல்லாமல் இருந்தது.இதை தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில், தங்கும் விடுதி, திருமண மண்டபம், ஓய்வு அறை கட்டித்தர வேண்டும் என, பல ஆண்டுகளாக அறநிலையத் துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.இதையடுத்து, ஹிந்து அறநிலையத் துறை சார்பில், 2014ல் கோவில் அருகே திருப்போரூர் -- நெம்மேலி சாலையில், தன்னிறைவு திட்டம் மற்றும் கோவில் நிதியில் இருந்து, 2 கோடி ரூபாயில் திருமண மண்டபம், ஓய்வு விடுதி ஆகியவை கட்ட திட்டமிட்டு, கட்டுமான பணிகள் துவங்கின.கடந்த 2016ல், 90 சதவீதம் பணிகள் மட்டும் முடிக்கப்பட்டன. ஆனால், மீதமுள்ள பணிகள் ஐந்து ஆண்டுகளாக முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டது. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதை தொடர்ந்து, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்து, விரைவில் கட்டுமான பணிகளை முடிக்க உத்தரவிட்டனர்.தொடர்ந்து, திருமண மண்டபத்திற்கான புதிய கழிப்பறை கட்டுதல், சமையல் அறை விரிவுபடுத்துதல், 'பார்க்கிங்' தரையை மேம்படுத்துதல் என, அனைத்து பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.முடிவில், 2.36 கோடி ரூபாயில் திருமண மண்டபம்; 50 லட்சம் ரூபாயில் பக்தர்கள் தங்கும் விடுதி; 49.80 லட்சம் ரூபாயில் பக்தர்கள் ஓய்வுக்கூடம் என, மொத்தம் 3.36 கோடி ரூபாயில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, 2022 ஜூன் மாதம் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.இந்நிலையில், கோவில் இடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து தடுக்கவும், வருமானத்தை அதிகப்படுத்தவும், பக்தர்களின் வசதிக்காகவும், கூடுதல் திருமண மண்டபம் கட்ட, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.மேலும், பெரிய அளவில், 500 பேர் அமரும் வகையில், திருமண மண்டபம் கட்ட மதிப்பீடு அறிக்கை தயார் செய்து, அரசிடம் பரிந்துரைத்தது.அதன்படி, திருப்போரூர்- - திருக்கழுக்குன்றம் சாலை, தண்டலம் ஊராட்சியில் அடங்கிய எடையான்குப்பம் பகுதியில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில், திருமண மண்டபம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, கோவில் நிர்வாகம் சார்பில், 6.36 கோடி ரூபாய்க்கு 'டெண்டர்' விடப்பட்டுள்ளது.கோவில் சார்ந்து, கூடுதல் திருமண மண்டபத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டர் கோரும் நபர்களை தேர்வு செய்வது குறித்து, தலைமை அலுவலகம் பரிசீலனை செய்யும். கூடுதல் வசதியுடன் விசாலமாக திருமண மண்டபம் கட்ட கோரிக்கை எழுந்தது. இதற்கு அரசு நடவடிக்கை எடுத்து, அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.- குமரவேல், கோவில் செயல் அலுவலர்

மண்டப அமைப்பு

மண்டபம் அமையும் வளாகத்தின் பரப்பு, 3.5 ஏக்கர். திருமண மண்டபம் 6,000 ச.அடி பரப்பில் அமைகிறது. தரைத்தளத்தில் சமையல் கூடம் உட்பட 500 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் அமைகிறது.முதல் தளத்தில் திருமணக் கூடம், மணமக்கள் அறைகள் அமைகின்றன. இரண்டாம் தளத்தில், மணமக்கள் குடும்பத்தினர் தங்கும் வகையில், 16 அறைகள் அமைக்கப்படுகின்றன. மண்டப வளாகத்தின் மற்ற பகுதிகளில், வாகனங்கள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ