| ADDED : மார் 25, 2024 05:53 AM
மாமல்லபுரம் : 'வாட்ஸாப்' குழுக்களில், அரசியல் மற்றும் தேர்தல் விமர்சன கருத்துக்களை பதிவிட வேண்டாம் என, குழு அட்மின்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.சமூக ஊடகங்களில் ஒன்றான 'வாட்ஸாப்' செயலி தவிர்க்க முடியாத ஒன்றாக உருவெடுத்துள்ளது. இச்செயலியை பல கோடி பேர், தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதில், கோடிக்கணக்கான 'வாட்ஸாப்' குழுக்களும் பயன்பாட்டில் உள்ளன. குழுக்களில் அவசியமற்ற, தேவையற்ற கருத்துக்கள், அரசியல் விமர்சனங்கள் உள்ளிட்டவை பதிவிடுவது அதிகரித்து வருகிறது.தற்போது, லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளை ஆதரிப்பது, எதிர்த்து விமர்சிப்பது என, கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால், கருத்து மோதல் உருவாகி சர்ச்சையாகிறது. இதை தவிர்க்க குழு 'அட்மின்'கள், 'தேர்தல் நடத்தை விதிகள் கருதி, அரசியல் விமர்சன கருத்துக்களை பதிவிட வேண்டாம்' என, தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.