மறைமலை நகர்,:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், தாசரிகுன்னத்துார் கிராமத்திற்கு செல்லும் சாலையில், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு, சேதமான நிலையில் உள்ளது. இந்த பள்ளங்களில், சமீபத்தில் பெய்த மழை நீர் தேங்கியுள்ளது.இந்த சாலையை கொளத்துார், தாசரிகுன்னத்துார் ஆகிய கிராம மக்கள், சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு பகுதிகளுக்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.கடந்த 2016ல், பிரதம மந்திரி சாலை திட்டத்தில் அமைக்கப்பட்ட இந்த சாலை, குவாரிகளில் இருந்து தொடர்ந்து ஜல்லிக்கற்கள் ஏற்றிச்செல்லும் லாரிகள், அதிக அளவில் சென்று வருவதால், பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.இந்த சாலையில் பேருந்து வசதி இல்லாததால், பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி சென்று வருகின்றனர். அதனால், அடிக்கடி ஜல்லிக்கற்கள் குத்தி, டயர்கள் பஞ்சராகி விடுகின்றன. சாலையில் மராமத்து பணிகள் கூட நடைபெறவில்லை.மேலும், இந்த சாலையில் விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் தடுமாறி கீழே விழுகின்றனர். புதிதாக செல்லும் வாகன ஓட்டிகள், அச்ச உணர்வுடனேயே சென்று வருகின்றனர்.எனவே, கனரக வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்துவதுடன், இந்த சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.