மறைமலை நகர்: செங்கல்பட்டு -- திருவள்ளூர் தடத்தில், சிங்கபெருமாள் கோவில் வழியாக, தடம் எண் 82சி அரசு பேருந்து இயக்கப் படுகிறது.இந்த தடத்தில், சிங்க பெருமாள் கோவில், தெள்ளிமேடு, ஆப்பூர், சேந்தமங்கலம், வடக்குப்பட்டு கூட்டு சாலை, ஒரகடம் உள்ளிட்டமுக்கிய பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.இதில், ஆப்பூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, ஆப்பூர், தாசரிகுன்னத்துார், வளையக்கரணை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, ஒரகடம் அடுத்த மாத்துாரில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, 50க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் சென்றுவருகின்றனர்.தினமும் காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை, இந்த வழியாகசெல்லும் அரசு பேருந்துகள், ஆப்பூர் நிறுத்தத்தில் நின்று செல்லாததால், மாணவ -- மாணவியர் கடும் அவதியடைந்துவருகின்றனர்.இது குறித்து, மாணவ -- மாணவியர் கூறியதாவது:ஆப்பூர் நிறுத்தத்தில், காலையில் 50க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் மற்றும் ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் என, நுாற்றுக்கும் மேற்பட்டோர், அரசு பேருந்துக்காக காத்திருக்கின்றனர்.ஆனால், 8:00 மணி முதல் 9:00 மணி வரை, 5க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள், இந்த நிறுத்தத்தில் நிற்காமல்செல்கின்றன.எப்போதாவது ஒரு பேருந்து மட்டும் நின்று செல்கிறது. இலவச பஸ் பாஸ் உள்ளதால், மாணவ - மாணவியரை பேருந்தில் ஏற்ற நடத்துனர்கள் மறுக்கின்றனர். கடந்த 4ம் தேதி, பேருந்தில் ஏறிய மாணவர்களை நடத்துனர்கள் இறக்கிவிட்டு சென்றனர்.இவர்கள் பேருந்தை நிறுத்தாததால், பள்ளிக்கு செல்ல தினமும் தாமதம் ஏற்படுகிறது. இதனால், ஒரகடம் வரை ஷேர் ஆட்டோக்களில் சென்று, அங்கிருந்து தாம்பரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் செல்லும் அரசு பேருந்துகளில் மாறி செல்லும் நிலை உள்ளது.பேருந்து பிடித்து செல்வதே சவாலாக உள்ளதால், படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, அரசு பேருந்துகள் ஆப்பூரில் முறையாக நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.