மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், அச்சிறுபாக்கம், ராமாபுரம், வேடந்தாங்கல், ஒரத்தி உள்ளிட்ட பகுதிகளில், கிணற்று பாசனம் மற்றும் ஏரி பாசனத்தில், நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வாயிலாக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், சிலாவட்டம் மற்றும் அண்டவாக்கம் பகுதிகளில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்குகளில் பாதுகாக்கப்படும்.தற்போது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து, லாரிகள் வாயிலாக நெல் மூட்டைகள் கொண்டுவரப்பட்டு, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு ரயில்களில் அனுப்பப்படுகின்றன.ரயில்களில் அனுப்புவதற்காக லாரிகளில் எடுத்துச் செல்லப்படும் நெல் மூட்டைகள், உரிய பாதுகாப்பு இன்றி, தார்ப்பாய் கொண்டு மூடப்படாமல், திறந்த நிலையில் எடுத்துச் சென்று, படாளம் லாரி பார்க்கிங்கில் நிறுத்துகின்றனர்.நெல் மூட்டைகளை ஏற்றிச்செல்ல, செங்கல்பட்டுக்கு சரக்கு ரயில் வரும் வரை, சில மணி நேரம் படாளம் பகுதியில் லாரிகள் நிறுத்தப்படுகின்றன.நேற்று முன்தினம், நெல் மூட்டைகள் ஏற்றிச்சென்ற 30க்கும் மேற்பட்ட லாரிகள், படாளம் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டன.திடீரென கோடை மழை பெய்தால், தார்ப்பாய் மூடப்படாமல், திறந்த நிலையில் லாரிகளில் உள்ள நெல் மூட்டைகள் நனைந்து, சேதமாகும் அவல நிலை உள்ளது.எனவே, நெல் மூட்டைகளை, தார்ப்பாய் கொண்டு மூடி, பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.