சென்னை:சென்னையின் முக்கிய சாலையாக, ஓ.எம்.ஆர்., உள்ளது. ஆறுவழி சாலையான இதில், இருவழி பாதையை மூடி, மெட்ரோ ரயில் பணி நடக்கிறது. இதனால், அணுகு சாலையில் கனரக வாகனங்கள் செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஓ.எம்.ஆர்., மற்றும் எம்.ஜி.ஆர்., சாலை இணையும், பெருங்குடி முக்கிய சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள இந்த சாலையில், 3 அடி அகல மழைநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகாலை ஒட்டி, 95 சதவீதம் கடைகள் உள்ளன.இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வடிகாலில் விடப்படுகிறது. இதனால் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, சந்திப்பு சாலையில் கழிவுநீர் ஆறாக வடிந்து ஓடுகிறது.இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் பாதசாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சுகாதார சீர்கேட்டுடன், தொற்று நோய் பரவ காரணமாக இருக்கிறது.சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரிப்பில், ஓ.எம்.ஆர்., உள்ளது. எம்.ஜி.ஆர்., சாலை, நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ளது. கழிவுநீர் விடுவதை தடுக்க, மாநகராட்சியின் சுகாதாரத்துறை மற்றும் குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த சாலையை பொறுத்தமட்டில், நான்கு துறைகளும் ஒருங்கிணைந்து தான் கழிவுநீர் பிரச்னைக்கு, தீர்வு காண வேண்டும். ஆனால், பொதுமக்கள் மற்றும் போலீசார் புகார் தெரிவித்தும், நான்கு துறைகளும் அலட்சியமாக உள்ளன. கழிவுநீர் பிரச்னைக்கு, நிரந்தரமாக தீர்வு காணவில்லை.உயர் அதிகாரி தலையிட்டு, சாலையில் வடியும் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.