| ADDED : பிப் 29, 2024 11:13 PM
சென்னை:சென்னை, மடிப்பாக்கம் அடுத்த கீழ்க்கட்டளை, பூபேந்திர நகரில், தொழிற்பேட்டை உள்ளது. இங்கு கிரிதரன், 45, என்பவருக்கு சொந்தமான நரேன் ரப்பர் மோல்டிங் தொழிலகம் செயல்படுகிறது.இத்தொழிலுக்கு வாகனங்களின் கழிவு இன்ஜின் ஆயில் எரிபொருளாக பயன்படுகிறது. இந்த கழிவு இன்ஜின் ஆயில், பீப்பாய்களில் நிரப்பப்பட்டிருந்த நிலையில், ஒரு பீப்பாயில் நேற்று மாலை, திடீரென தீ பற்றியது.பணியில் இருந்த ஆறு ஊழியர்கள், பாதுகாப்பாக வெளியேறி, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தாம்பரம் மற்றும் மேடவாக்கம் ஆகிய இடங்களிலிருந்து, இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.தொழிலகத்தின் உள்ளே இருந்த மூலப்பொருட்கள் எரிந்து சாம்பலாகின. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மடிப்பாக்கம் போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.