உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆத்துார் சுங்கச்சாவடியில் நிற்காத பேருந்துகள் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு

ஆத்துார் சுங்கச்சாவடியில் நிற்காத பேருந்துகள் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே, மாவட்ட எல்லை முடிவில், ஆத்துார் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியை கடந்து, இரு மார்க்கத்திலும், நாள்தோறும் 6,000த்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் கடந்து செல்கின்றன.இந்நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகள் விழுப்புரம், திண்டிவனம் கடந்து மேல்மருவத்துார் பேருந்து நிறுத்தத்தில் மட்டுமே நிறுத்தப்படுகின்றன.அதனால், சுங்கச்சாவடியை சுற்றியுள்ள ஒரத்தி, அத்திவாக்கம், அனந்தமங்கலம், முருங்கை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆவணிப்பூர், ஆத்துார், ஒலக்கூர் என, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதியடைகின்றனர். திண்டிவனத்தில் இருந்து மேல்மருவத்துாருக்கு, 35 கி.மீ., பயண துாரம் ஆகும். அரசு பேருந்துகளில், திண்டிவனத்திலிருந்து- மேல்மருவத்துாருக்கு, 40 ரூபாய் பயண சீட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.திண்டிவனத்தில் இருந்து ஆத்துார் சுங்கச்சாவடி, 25 கி.மீ., தொலைவில் உள்ளது. இருப்பினும், ஆத்துார் சுங்கச்சாவடியில் இருந்து மேல்மருவத்துார் செல்வதற்கு, 40 ரூபாய் பயண கட்டணம் வசூல் செய்கின்றனர்.எனவே, ஆத்துார் சுங்கச்சாவடி பகுதியில் பயணியர் நிழற்குடை அமைத்து, அரசு விரைவு பேருந்து, அதிவிரைவு பேருந்துகள் நின்று செல்லவும், பயண துாரத்திற்கு ஏற்றவாறு, பயணச் சீட்டு கட்டணங்களை வகுக்க வேண்டும் எனவும் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெயர் குறிப்பிட விரும்பாத அரசு பேருந்து நடத்துனர் கூறியதாவது:திண்டிவனம், மேல்மருவத்துார் மட்டுமே, பேருந்து நிறுத்தங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆத்துார் சுங்கச்சாவடி பகுதியில் பேருந்து நிறுத்தம் இல்லாததால், அரசு பேருந்துகள் அங்கு நிற்பதில்லை.பாஸ்ட் ட்ராக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதால், பேருந்துகள் அதிவிரைவாக சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன.பேருந்தில் போதிய அளவு பயணியர் இல்லாத நேரங்களில், ஆத்துார் சுங்கச்சாவடி, அச்சிறுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்களை, பேருந்தில் ஏறுவதற்கு அனுமதிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

போதுமான இட வசதி உள்ளது

பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கு தேவையான அரசுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. விழுப்புரம் மாவட்ட எல்லை துவக்கம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட எல்லை முடிவு பகுதியில் உள்ள ஆத்துார் சுங்கச்சாவடியில் போதுமான அளவு இட வசதி உள்ளது.இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், உணவகங்கள், வணிக வளாகம் உள்ளிட்டவை அமைக்க தேவையான இட வசதி மற்றும் குடிநீர் வசதிகளும் உள்ளன.எனவே, சுற்றுவட்டார பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், சுங்கச்சாவடி பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அடாவடியாக டிக்கெட் கட்டணம் வசூல்

ஆத்துார் பேருந்து பயணி ராமஜெயம், 48, கூறியதாவது:ஆத்துார் சுங்கச்சாவடியை சுற்றியுள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட எல்லையின் கடைசியில் உள்ள கிராமங்கள் என, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், ஆத்துார் சுங்கச்சாவடியில் நின்று செல்லும் பேருந்துகளில், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை போன்ற பகுதிகளுக்கு பயணம் செய்கின்றனர்.ஆத்துார் சுங்கச்சாவடியில் இருந்து மேல்மருவத்துார், மதுராந்தகம் போன்ற பகுதிகளுக்கான 40 ரூபாய், 50 ரூபாய் பயண சீட்டு கட்டணத்தையே வசூல் செய்கின்றனர்.இது குறித்து பேருந்து நடத்துனர்களிடம் கேள்வி எழுப்பினால், விருப்பம் இருந்தால் பேருந்தில் பயணம் செய்யுங்கள்; பயண கட்டணம் 40 ரூபாய் தான் என, அடாவடியாக பதில் அளிக்கின்றனர்.இரவு நேரங்களில், சென்னை மார்க்கத்தில் இருந்து வரும் ரயிலில் பயணம் செய்து, மேல்மருவத்துார் இறங்கி, பேருந்துகளில் திண்டிவனம் வரை செல்லத்தக்க பயண கட்டணமான 40 ரூபாய் பயண சீட்டை பெற்று, ஆத்துார் சுங்கச்சாவடியில் இறங்கி, இருசக்கர வாகனங்களில் தங்கள் பகுதிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.இது குறித்து, அரசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, ஆத்துார் சுங்கச்சாவடி பகுதியில், பேருந்து நிறுத்தம் அமைத்து, பயண சீட்டு கட்டணத்தை வரைமுறைப்படுத்தி, குறைந்த கட்டணமாக வசூலிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி