| ADDED : ஆக 13, 2024 12:12 AM
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அருகே காட்டுக்கொள்ளைமேடு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு தீமிதி திருவிழா நடந்தது.நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர். அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், 47, என்பவர், 7 வயது மகனுடன் விரதம் இருந்து தீ மிதிக்க வந்தார். சிறுவன் தயக்கம் காட்டிய நிலையில், மகனின் கையை பிடித்துக்கொண்டு மணிகண்டன் தீக்குழியில் இறங்கினார். அப்போது சிறுவன் தடுமாறி விழுந்தார். சுற்றி இருந்தவர்கள் ஓடிச்சென்று சிறுவனை மீட்டனர். தீக்காயம் அடைந்த சிறுவன், சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொளத்துார்: கொளத்துார், ஸ்ரீதேவி கங்கையம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், தீமிதி விழா நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து. நேர்த்திக்கடன் செலுத்தினர்.இதில், கொளத்துார், வடக்கு மாடவீதியைச் சேர்ந்த வேலு, 45, என்பவரும் தீ மிதித்தார். அப்போது, எதிர்பாராத விதமாக இடறி விழுந்ததில், இடது பக்க மார்பு மற்றும் வலதுகால் முட்டியில் தீக்காயம் ஏற்பட்டது. அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.