சென்னை, 'திருவான்மியூர், பாம்பன் சுவாமிகள் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தும் முடிவில் தலையிட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோவில் கும்பாபிஷேகம், இன்று நடக்கிறது. இதற்கான அறிவிப்பை, அறநிலையத்துறை வெளியிட்டது.இதற்கு தடை கோரி, திருவான்மியூரைச் சேர்ந்த சைவ சித்தாந்தப் பெருமன்ற செயற்குழு உறுப்பினர் ஜெயகலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார்.இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில், 'கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமானால், கோவிலில் கொடிமரம், கலசம், பலிபீடம் ஆகியவை இருக்க வேண்டும். பாம்பன் சுவாமி கோவிலில், இதுவரை எந்த கும்பாபிஷேகமும் நடத்தப்படவில்லை. தற்போது கும்பாபிஷேகம் நடத்தும் அறநிலைய துறையின் செயல் அத்துமீறல்' என, தெரிவிக்கப்பட்டது.அப்போது, அறநிலையத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், “உயர் நீதிமன்ற உத்தரவின்படி கும்பாபிஷேகம் நடத்தலாம். பாலாலயம் ஏற்கனவே முடிந்து விட்டது. முருகன், விநாயகர் சிலைகள் உள்ளதால், இது கோவில் தான்,” என்றார்.இதையடுத்து, 'பூஜைகள், விழாக்களை அறநிலையத்துறை நடத்தலாம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றமும் எந்த தடையும் விதிக்கவில்லை. எனவே, கும்பாபிஷேகம் நடத்தும் விஷயத்தில் தலையிட முடியாது' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.தொடர்ந்து, 'பாம்பன் சுவாமிகள் கோவில், சமாதியா அல்லது கோவிலா என்று முடிவெடுக்க வேண்டும் என்பதால், இந்த மனு தொடர்பாக விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.