சென்னை, ''வட சென்னை வளர்ச்சிக்கு, 11 அரசு துறைகளுடன் இணைந்து, 4,181 கோடி ரூபாயில், மெகா திட்டம் செயல்படப் போகிறது,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னை, தங்க சாலையில் நடந்த, வட சென்னை வளர்ச்சி திட்டப் பணிகள் விரிவாக்க விழாவில், முதல்வர் பேசியதாவது:'வட சென்னை வளர்ச்சி திட்டம்' என்ற பெயரே, நம்முடைய திராவிட மாடல் அரசு, இந்தப் பகுதியை எவ்வளவு முக்கியமாக நினைக்கிறது என்பதற்கு போதும்.இங்கு அமர்ந்திருக்கும் அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, மேயர், துணை மேயர், அதிகாரிகள் ஆகியோரிடம், சென்னை மாநகரை, இந்தியாவின் தலைசிறந்த மாநகரமாக, நவீன நகரமாக உருவாக்க வேண்டிய பொறுப்பை ஒப்படைத்துள்ளேன்.அந்த பணியை சிறப்பாக செய்ய வேண்டும் எனக் கட்டளையிடுகிறேன். அதைத் தொடர்ந்து கண்காணிப்பேன்.சென்னையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமை எனக்கு உண்டு. சென்னை மாநகரத்தை நவீனமயமாக்கியதில், தி.மு.க.,வுக்கு பெரும் பங்கு உண்டு.சென்னைக்கான வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி, இந்தியாவே திரும்பி பார்க்கும் வளர்ச்சியை ஏற்படுத்தியது, தி.மு.க., அரசு. தி.மு.க., ஆட்சி, சென்னையின் பொற்காலமாக இருந்தது. இடைக்காலத்தில், 10 ஆண்டுகள் பதவியில் இருந்தவர்கள், சென்னையை சீரழித்து பாழ்படுத்தினர். நம்மை பொறுத்தவரை, துயர் வரும் நேரம் துணை நிற்பது மட்டுமில்லை. துயர் துடைக்க புதிய திட்டங்களையும், உருவாக்கி வருகிறோம். சென்னை மீண்டும் புதுப்பொலிவு அடைந்து வருகிறது.இதற்காகவே தீட்டப்பட்டிருக்கிற சிறப்பு திட்டம்தான், 'வட சென்னை வளர்ச்சி திட்டம்'. இதற்காக கடந்த பட்ஜெட்டில், 1,000 கோடி ரூபாய் அறிவித்தோம்.இன்றைக்கு அந்தத் தொகையை, நான்கு மடங்கு உயர்த்தி, 4,181 கோடி ரூபாய் மதிப்பில், 11 அரசு துறைகளுடன் இணைந்து, வட சென்னை வளர்ச்சிக்கு, மெகா திட்டம் செயல்படப் போகிறது.இந்த திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் திட்டங்களுக்கு, 440.62; இதர துறைகளின் திட்டங்களுக்கு, 886.46 கோடி ரூபாயை, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக்குழுமம் ஒதுக்கீடு செய்யும்.மீதமுள்ள நிதியை, அந்தந்தத் துறைகள், வாரியங்கள், பட்ஜெட் ஒதுக்கீடுகள் வழியே, அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்படும்.இத்திட்டத்தில், மாதிரிப் பள்ளிகளை உருவாக்குதல், குறைந்த விலையில் வீட்டு வசதி, திறன் மேம்பாட்டு மையங்களை உருவாக்குதல், புதிய பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளை நிர்மானித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.மேலும், 640 கோடி ரூபாயில், கொடுங்கையூரில் உயிரி சுரங்க திட்டம்; 238 கோடி ரூபாயில் இரண்டு பெரிய பாலங்கள்; 80 கோடி ரூபாயில் தணிகாசலம் கால்வாய் புனரமைப்பு திட்டம்; 823 கோடி ரூபாயில், பாரிமுனை பேருந்து முனையம் மறு கட்டுமான நடக்க உள்ளது.தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 15 இடங்களில் உள்ள, 7,060 சேதமடைந்த குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, 9,798 புதிய குடியிருப்புகள், 567.68 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில், 200 திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இவ்வாறு, முதல்வர் பேசினார்.