சென்னை: சென்னையில் துாய்மை பணியாளர்களுக்கு, காலை உணவு வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். தொடர்ந்து, 1,000 பேருக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில், வீடுகள் ஒதுக்கீட்டு ஆணைகளையும் வழங்கி, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதையறிந்த பலரும், 'நாமும் துாய்மை பணியாளராக இல்லாமல் போய்விட்டோமே' என ஆதங்கப்படும் வகையில், தமிழக அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில் துாய்மை பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி, பல கட்ட போராட்டங்களை நடத்தினர். பிரச்னை நீதிமன்றம் வரை சென்றது. இது, அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியது. இதையடுத்து, துாய்மை பணியாளர்களின் சம்பளத்தை, 585 ரூபாயில் இருந்து, 761 ரூபாயாக அரசு உயர்த்தியது. துாய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளையும், இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தையும் அரசு அறிவித்தது. இந்நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த விழாவில், மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். அப்போது, துாய்மை பணியாளர்களுக்கான உணவை சாப்பிட்டு பார்த்து, அவர்களுடன் முதல்வர் கலந்துரையாடினார். இத்திட்டத்தின் கீழ், 31,373 துாய்மை பணியாளர்கள் பயன்பெற உள்ளனர். மூன்று வேளையும் உணவு வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், துாய்மை பணியாளர்கள் 1,000 பேருக்கு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில், வீடுகள் ஒதுக்கீட்டு ஆணைகளையும் முதல்வர் வழங்கி, இன்ப அதிர்ச்சி கொடுத்தார். விடுபட்டோருக்கும் வீடுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த பலரும், நாமும் துாய்மை பணியாளர்களாக இல்லாமல் போய்விட்டோமே என, ஏங்கும் நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் வேண்டுகோள் துாய்மை பணியாளர்களுக்கு வீடு வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தினமும் காலையில் விடியும்போது, நம் சென்னை, முந்தைய நாள் குப்பை இல்லாமல் துாய்மையாக இருக்கிறது என்றால், அதற்கு காரணம் இரவு முழுதும் கடுமையாக உழைக்கும் துாய்மை பணியாளர்கள்தான். வெயில், மழை, வெள்ளம், புயலால் பாதிக்கப்பட்டாலும், அதிலிருந்து சென்னை மீண்டு வர உங்கள் பணி முக்கியம். பகல் எல்லாம், 'பிசி'யாக இருக்கும் நகரத்தில், ஊரே அடங்கியப்பின், துாய்மை பணியாளர்கள் ஓய்வின்றி உழைத்து வருகின்றனர். ஒட்டுமொத்த சென்னை சார்பில் உங்களுக்கு நன்றி. துாய்மை பணியாளர்களுக்கு இனி பணிகளுக்கு இடையில், சுவையும், ஆரோக்கியம் நிறைந்த உணவு வழங்கப்படும். துாய்மை பணியாளர் நல வாரியம், வாரிசுகள் தொழில் துவங்க கடனுதவி உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், உங்களுக்கான தேவைகள் நிறைய இருப்பது எனக்கு தெரியும்; கோரிக்கைகள் நிச்சயமாக படிப்படியாக நிறைவேற்றப்படும். துாய்மை பணியாளர்களுக்காக, 200 வார்டுகளிலும் பிரத்யேகமாக, 300 சதுர அடி அளவில் உடை மாற்றும் அறை, கழிப்பறையுடன் ஓய்வறைகள் அமைக்கப்படும். துாய்மை பணியாளர்களுக்கான உணவு திட்டம் டிச., 6 முதல் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும். வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு, சென்னை தான் துாய்மையான நகரம் என்று சொல்வதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும். நாம் நடந்து செல்லும் பாதை, சிறிது துாய்மையற்று இருந்தாலே முக சுளிப்போடு கடந்து போவோம். ஆனால், நாம் அன்றாடம் தேவையில்லை என துாக்கி போடுவதை, துாய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்துகின்றனர். இவர்களை நினைத்து பாருங்கள். பொது இடங்களில் குப்பை, கழிவு கொட்டுவது போன்ற செயல்களை செய்வது நியாயமா என, சிந்தித்து பாருங்கள். சிலர் வீட்டில் இருந்து தொட்டி வரை எடுத்து வரும் குப்பையை, தொட்டியில் போடாமல் துாக்கி எறிவது, அருகாமையில் போடுவது போன்ற பழக்கங்களை மாற்றி கொள்ள வேண்டும். ஜப்பான் போன்ற மேற்கத்திய நாடுகளை போல் சுய ஒழுக்கத்தோடு, குப்பையை ஒழுங்காக தரம் பிரித்து போட்டு, துாய்மை பணியாளர்களின் சுமையை குறைக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார். துவக்கப்பட்ட திட்டங்கள் சென்னையில், 31,373 துாய்மை பணியாளர்கள் பயன்பெறும் வகையில் மூன்று வேளை உணவு வழங்கும் திட்டம் துவங்கப் பட்டுள்ளது 1,000 துாய்மை பணியாளர்களுக்கு, திருவொற்றியூர் கார்கில் நகர் மற்றும் பெரும்பாக்கத்தில், வீடுகள் ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. இவர்களுக்கு 35 லட்சம் ரூபாயிலான உதவிகளை தாட்கோ நிறுவனம் வழங்கியது பணியின்போது உயிரிழந்த, இரு துாய்மை பணியாளர்களின் வாரிசுகளுக்கு தலா, 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது துாய்மை பணியாளர் குடும்பத்தினர் 25 பேர் சுய தொழில் துவங்க, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டிற்கான தொழில் முனைவோர் திட்டத்தில், மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டது துாய்மை பணியாளர்களின் குழந்தைகள் 1,260 பேருக்கு கல்வி கட்டணம், விடுதி கட்டணம் என, 2.82 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு சோழிங்கநல்லுார் மண்டலத்தில், 500க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் உள்ளனர். இவர்களில், கணவரை இழந்தவர்கள், கைவிடப்பட்டவர்கள், தனியாக வசிப்பவர்கள் என, 65 பேருக்கு நேற்று, வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை முதல்வர் வழங்கினார். விடுபட்ட துாய்மை பணியாளர்கள், தங்களுக்கும் வீடு வழங்க கோரி, மேட்டுக்குப்பம், ஓ.எம்.ஆர்., சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களுடன் பேச்சு நடத்தி, தகுதியான அனைவருக்கும் வீடு கிடைக்கும் என, உறுதி அளித்ததை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், ஓ.எம்.ஆரில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.