| ADDED : ஜன 23, 2024 12:32 AM
சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், நாவலுாரில் 33 ஏக்கர் பரப்பில் உள்ள பெரிய ஏரியை,சிப்காட் எனப்படும் தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டு கழகம் - 10 ஆண்டுகளாக பராமரித்து வருகிறது.இந்த ஏரியில் 10 ஏக்கரில் பூங்கா அமைக்கப்பட்டு வருவது குறித்தும், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் நாளிதழ்களில் செய்தி வெளியானது.அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாயம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் ஏரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு நீர்வளத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகளுக்கு உத்தரவிட்டது.இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:நாவலுார் பெரிய ஏரியை ஆழப்படுத்தி, நீர் சேமிப்புத் திறனை அதிகரிக்க வேண்டும் என தீர்ப்பாயம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.ஏரியின் நடுவே உள்ள மணல் திட்டுகளில் பறவைகளை கவரக்கூடிய மரங்களை நட்டு, ஏரியின் அழகை அதிகரிக்க வேண்டும். இது வெளிநாட்டு பறவைகள் அதிகமாக வர வழிவகுக்கும். ஏரியில் உள்ள பூங்கா கட்டுமானப் பணிகள் முடியாததால் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை என்று சிப்காட் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக குறைகள் இருந்தால் அவர்கள் தீர்ப்பாயத்தை அணுகலாம். வழக்கின் அடுத்த விசாரணை வரும் மார்ச் 11ல் நடக்கும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.