| ADDED : மே 01, 2024 12:16 AM
பாலக்காடு;திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து சாதித்து காட்டியுள்ளார், பாலக்காட்டை சேர்ந்த சலுான் கடை தொழிலாளி.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் காவச்சேரியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். சலுான் கடை உரிமையாளரும், தொழிலாளியும் ஆவார். இவரது கடைக்கு முடி அழகு படுத்துவதற்கு மட்டும் வருகிறார்கள் என்று நினைக்காதீர்கள். இவரை தேடி வருவோரில் திரைப்பட இயக்குனர்கள் மற்றும் சினிமாவில் வாய்ப்பு கேட்டு வருவோரும் உள்ளனர்.திரைப்படத்துக்கு திரைக்கதை எழுதி, நடிக்கும் கிருஷ்ணகுமார், 22 நாடகங்கள் எழுதி உள்ளார். 18 நாடகங்கள் இயக்கியும் உள்ளார். நாடக நடிப்பிலும், இயக்கத்திலும், மாநில அளவில் பல விருதுகள் பெற்றுள்ளார். எவ்வளவு உயர்வு அடைந்தாலும், சலுான் தொழிலை கிருஷ்ணகுமாரும், குடும்பமும் கைவிடவில்லை. பஞ்ச வாத்திய கலைஞரான மகன் சரவணனும் தந்தைக்கு உதவியாக சலுான் தொழில் செய்து வருகிறார்.இதுகுறித்து, கிருஷ்ணகுமார் கூறியதாவது:பத்தாம் வகுப்பு படிப்பு முடித்து, சலுான் பணிக்காக சென்னை சென்றபோது தான், இயக்குனர் மற்றும் நடிகர் ஆக வேண்டும் என்ற ஆசை தோன்றியது. அங்கு சினிமாவில் உயர முடியாது என்று அறிந்து, சொந்த ஊருக்கு வந்து நாடகத்தில் விரிவாக செயல்பட துவங்கினேன். 1983ல் மலப்புரம் பொன்னானியில் நடந்த, அகில கேரள நாடகப் போட்டியில், என் நாடகம் சிறந்த விளக்கக்காட்சி மற்றும் எழுத்துக்கான விருதை பெற்றது. திரூர் துஞ்சன்பரம்பில் நடந்த நாடகப் போட்டியில் நான் இயக்கிய 'யாசனை' என்ற நாடகத்தின் நடிப்பிற்கு சிறந்த நகைச்சுவை நடிகன் என்ற விருது கிடைத்தது.கூற்றநாட்டில் நடந்த போட்டியில் நான் இயக்கிய 'கத்திகா' என்ற நாடகம் சிறந்த நாடகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, வி.டி.பட்டத்திரிப்பாடு கோப்பை கிடைத்தது. கே.ஆர். கிருஷ்ண இயக்கிய 'இனியும் எத்ர துாரம்' என்ற மலையாள திரைப்படத்துக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதினேன்.மேலும், மலையாளம் மற்றும் தமிழ் படங்களுக்காக திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். 'சிந்து விழி' என்ற தமிழ் திரைப்படத்திலும் நடித்துள்ளேன்.இவ்வாறு, கிருஷ்ணகுமார் கூறினார்.