| ADDED : ஜூன் 29, 2024 01:22 AM
கோவை:கோவையில் நவீன வசதிகளுடன் புதிய விளையாட்டு விடுதி கட்டுவதற்கான இடத்தை விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி நேற்று ஆய்வு செய்தார். கோவை மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதியில், கூடைப்பந்து வீரர்கள் 24 பேர், வாலிபால் வீரர்கள் 24 பேர் மற்றும் தடகள வீரர்கள் 12 பேர் என மொத்தம் 60 பேர் உள்ளனர். மற்ற மாவட்டங்களில் உள்ள விளையாட்டு விடுதிகளை காட்டிலும், கோவையில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவு. மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கோவையை சேர்ந்த வீரர் - வீராங்கனையினர் அதிக அளவில் பதக்கங்களை வென்று வந்தாலும், விளையாட்டு கட்டமைப்புகளில் கோவைக்கான தேவை அதிகமாகவே இருக்கிறது. அதில் ஒன்று நல்ல விளையாட்டு விடுதி. நீண்ட நாட்களாக இந்த குறை இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த மானியக் கோரிக்கையில், கோவை மாவட்டத்தில் புதிய விளையாட்டு விடுதி அமைக்கப்படும் என அமைச்சர் அறிவித்தார்.இதைதொடர்ந்து, விளை யாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதன் ரெட்டி நேற்று கோவையில் ஆய்வு மேற்கொண்டார். அவர் தெரிவிக்கையில், ''தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரின் அறிவிப்பின் படி, கோவையில் புதிய விடுதி அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள மாநகராட்சி கட்டுமான பணிகளுக்காக பயன்படுத்தி வரும் இடம் (முன்னாள் சர்க்கஸ் மைதானம்) விடுதிக்கு ஏற்றதாக இருக்கிறது.இங்கு, சுமார், ஏழு கோடி ரூபாய் மதிப்பில், 80 மாணவர்கள் தங்கும் வகையில் விடுதி கட்டப்படவுள்ளது. நேரு ஸ்டேடியம் எதிரில் உள்ள இடத்தில், வாகன பார்க்கிங் மற்றும் தடகள பயிற்சி டிராக் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இரண்டு மாதங்களில், இதற்கான பணிகள் துவங்கும். அடுத்த கல்வியாண்டிற்குள் புதிய விடுதி தயாராகும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன,'' என்றார்.