| ADDED : ஆக 20, 2024 12:48 AM
கோவை;ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள ஏழைகளுக்கான, பட்டா நிலத்தை கையகப்படுத்தி, மக்கள் வாழ வழி செய்ய வேண்டும் என்று, கிராம மக்கள் கலெக்டரிடம் கூறினர்.கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், கிணத்துக்கடவு பாலார்பதியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளித்தனர்.மனுவில், 'பாலார்பதி, ரங்கேகவுண்டன்புதூர் ஆகிய இரண்டு கிராமங்களிலும் அ.தி.மு.க.,-வை சேர்ந்த ஈஸ்வரனின் மனைவி ஈஸ்வரி பஞ்சாயத்து கவுன்சிலராக இருக்கிறார். மனைவியின் அதிகாரத்தை பயன்படுத்தி, ஈஸ்வரன் அரசு இலவசமாக வழங்கிய இடத்தை ஆக்கிரமித்துள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. சூலூர் தென்றல் நகர் மக்கள், கடந்த பத்தாண்டாக சாலை வசதி, குடிநீர் வசதியோ, உப்பு தண்ணீர் வசதியோ இல்லை எனவும், தென்றல் நகர் சூலூர் பேரூராட்சியுடன் இணைக்க வலியுறுத்தியும் மனு அளித்தனர்.ஜனநாயக உரிமைகளுக்கான கூட்டமைப்பு சார்பில், பொள்ளாச்சி பகுதியில் கடந்த 4ம் தேதி கொலை செய்யப்பட்ட அருந்ததிய சமூக இளைஞர் கொலை வழக்கை, பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், பதிவு செய்ய வேண்டும்; கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என, கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.