கோவை;கோவை மாநகராட்சி வ.உ.சி., வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 5 கடமான்கள், வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டன.கோவை, வ.உ.சி., பூங்காவுக்கான, உயிரியல் பூங்கா அந்தஸ்தை நீட்டிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதையடுத்து, பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த, அட்டவணை வன உயிரினங்களை, வனப்பகுதிக்குள் விடுவிக்க தமிழக வனத்துறை முடிவெடுத்தது.இதன் ஒரு பகுதியாக, பூங்காவில் பராமரிக்கப்பட்ட புள்ளி மான்கள், கடந்த மே மாதம், வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக, கடமான்களை விடுவிக்க, அவற்றின் எச்சங்கள் வண்டலூருக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. கடமான்களுக்கு காச நோய் மற்றும் தொற்று ஏதும் இல்லை என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.தொடர்ந்து, கடந்த மார்ச் முதல், மான்களுக்கு வழங்கப்பட்டு வந்த அடர் தீவனங்கள் நிறுத்தப்பட்டு, பச்சைத் தீவனங்கள் மற்றும் சிறுவாணி வனப் பகுதியில் மான்கள் உண்ணும் தாவர வகைகள், கட மான்களுக்கு வழங்கப்பட்டன.நேற்று, கோவை மாநகராட்சி வாகனத்தில் கூண்டு அமைக்கப்பட்டு, 2 ஆண் கடமான்கள், 3 பெண் கடமான்கள், இக்கூண்டில் ஏற்றப்பட்டு, சிறுவாணி மலை அடிவாரம் பில்டர் ஹவுஸ் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டன. கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், வனத்துறை கால்நடை அலுவலர், வ.உ.சி., பூங்கா இயக்குனர், ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.வனத்துக்குள் விடுவிக்கப்பட்ட கட மான்கள், தீவனம் உட்கொள்ளுதல், நீர் அருந்துதல் உட்பட அவற்றின் ஆரோக்கியம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.