- நிருபர் குழு -தேர்தல் ஆணையம் தமிழகத்தில், லோக்சபா தேர்தல் ஏப்., 19ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. இதையடுத்து, வாக்காளர்களுக்கு ஓட்டளிப்பதற்காக, அரசியல் கட்சியினர் பணம் மற்றும் அன்பளிப்பாக பொருட்கள் மட்டுமின்றி, மதுபானங்களும் வழங்கப்படலாம்.இதற்காக மற்ற பகுதியிலிருந்து வாகனங்கள் வாயிலாக, பணம், மதுபானம் மற்றும் பொருட்கள் கொண்டு வரலாம் என கருத்தும் நிலவுகிறது. எனவே, இதனை முறையாக கண்காணிக்க, நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படை நியமிக்கப்பட்டுள்ளது.பறக்கும்படையில், பி.டி.ஓ., போலீசார், வீடியோகிராபர் உட்பட ஐந்து பேர் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.அதில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், பணம் எடுத்து வந்தால் உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்ல வேண்டும். ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வந்தால் பணம் பறிமுதல் செய்ய வேண்டும்.தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகிறதா என, கண்காணிப்பு செய்ய பறக்கும்படை குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டது. பொள்ளாச்சி
பொள்ளாச்சியில், தலா மூன்று பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவும், இரண்டு வீடியோ கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.காலை, 6:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரையும், மதியம், 2:00 மணி முதல், இரவு 10:00 மணி வரையும், இரவு, 10:00 மணி முதல் காலை, 6:00 மணி வரை என 'ஷிப்ட்' அடிப்படையில் இக்குழு செயல்படும்.பொள்ளாச்சி ராமபட்டிணம் அருகே, உரிய ஆவணங்களின்றி சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த மோகன்ராஜ் எடுத்து வந்த, 3 லட்சத்து, 37ஆயிரத்து, 400 ரூபாய் பணத்தை, பறக்கும்படை குழுவினர் பறிமுதல் செய்து சப் - கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.நேற்று கோபாலபுரத்தில் நிலையான கண்காணிப்பு குழு மேற்கொண்ட ஆய்வில், மதுரையை சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் இருந்து, ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட, 2 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.அதே போன்று, நல்லுார் கை காட்டி அருகே பெரிய நெகமத்தைச்சேர்ந்த சந்திரகுமார் ஆவணமின்றி எடுத்து வந்த, ஒரு லட்சத்து, 64 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும்படை குழுவினர் பறிமுதல் செய்தனர்.கோபாலபுரம் அருகே முறையான ஆவணங்களின்றி, கேரளா மாநிலம் பாலக்காட்டைச்சேர்ந்த பைசல் என்பவர் கொண்டு வந்த, 2 லட்சத்து, 13 ஆயிரத்து, 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். வால்பாறை
வால்பாறை தொகுதியில் தலா, மூன்று பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவும், இரண்டு வீடியோ கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு வாயிலாக கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.நேற்று மீனாட்சிபுரம் அருகே, தஞ்சாவூர் மாவட்டத்தைச்சேர்ந்த பிரகாஷ் என்பவர், ஆவணங்களின்றி கொண்டு வந்த ஒரு லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். உடுமலை
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, விதிமுறை மீறலை கண்டறிய, பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.அவ்வகையில், நிலையான கண்காணிப்பு குழுவினர் கெடிமேடு பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது, அவ்வழியாக பொள்ளாச்சியைச்சேர்ந்த பிரவீன்குமார் தனது வாகனத்தில், எவ்வித ஆவணமும் இல்லாமல், சால்வைகள் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, குழுவினர், 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 158 சால்வைகளை பறிமுதல் செய்தனர்.