| ADDED : ஜன 19, 2024 04:20 AM
கோவை : கோவை மாவட்டத்தில், கடந்த நான்கு நாட்களில், ரூ.50 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.கோவை மாவட்டத்தில் தெற்கு, வடக்கு என இரு வட்டங்களாக 'டாஸ்மாக்' மதுக்கடைகள் பிரிக்கப்பட்டு உள்ளன. வடக்கில், 156, தெற்கில், 129 மதுக்கடைகள் நடத்தப்படுகின்றன.வாரத்தின் இறுதி நாட்களான சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை மது பானம் விற்பனை எப்போதும் அதிகமாக இருக்கிறது. இவ்விரு நாட்களில், பல கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெறுகிறது.பொங்கல் பண்டிகைக்கு ஞாயிறு முதல் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால், மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதில், திருவள்ளுவர் தினத்தன்று மட்டும் கடை மூடப்பட்டு இருந்தது. மற்ற நாட்களில் வியாபாரம் களைகட்டியது. வாரச்சம்பளம் வழங்கும் கம்பெனிகளில், சனிக்கிழமை பட்டுவாடா செய்ததால், அன்றிரவும் மதுக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை (செவ்வாய் தவிர்த்து) நான்கு நாட்களில், வடக்கு வட்டத்தில் ரூ.28 கோடிக்கும், தெற்கு வட்டத்தில் ரூ.22 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகி இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக, மாவட்ட அளவில், ரூ.50 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளன. இது, 'டாஸ்மாக்' நிறுவனத்தில் நடந்த வர்த்தகம் மட்டுமே. இதுதவிர, ஓட்டல்கள் மற்றும் கிளப்புகள், எலைட் பார்களில் விற்கப்பட்ட மதுபானங்கள் கணக்கு தனி.இதன்படி கணக்கிட்டால், ஒரு நாளைக்கு, ரூ.10 கோடிக்கும் அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகி இருப்பது தெரியவந்துள்ளது. தொழில் வளர்ச்சியில் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைக்கும் கோவை மாவட்டத்தில், மதுபானம் விற்பனையும் மற்ற நகரங்களை மிஞ்சும் வகையில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திஇருக்கிறது.