உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கோவை மெமு பாசஞ்சர் ரயிலில் கூடுதல் பெட்டிகள் வேண்டும்

 கோவை மெமு பாசஞ்சர் ரயிலில் கூடுதல் பெட்டிகள் வேண்டும்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வழியாக போத்தனூர் வரை இயக்கப்படும் மெமு பாசஞ்சர் ரயிலில், கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என, ரயில் பயணிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கும், போத்தனூருக்கும் மெமு பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. தினமும் காலையில் இருந்து, இரவு வரை, ஐந்து முறை வந்து செல்கிறது. இந்த ரயிலில் கல்லூரிகளுக்கும் செல்லும் மாணவ, மாணவியர், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்கள், கட்டட வேலைகள் செய்யும் தொழிலாளர்கள் என, ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். அதிலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை, 8:15 மணிக்கு புறப்படும், இந்த ரயிலில், பெட்டிகளின் உள்ளே பயணிகள் நிற்க இடம் இல்லாத நிலையில், படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்கின்றனர். இதுகுறித்து ரயில் பயணிகள் கூறியதாவது: மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வழியாக போத்தனூர் வரை மெமு பாசஞ்சர் ரயில், பத்து பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. தினமும் ஐந்து முறை வந்து செல்லும் இந்த ரயிலில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள், பயணம் செய்து வருகின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து காலையிலும், கோவையில் இருந்து மாலையில் இயக்கப்படும் இந்த ரயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. படிக்கட்டுகளில் தொங்கும் பயணிகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கோவை செல்லும் மெமு பாசஞ்சர் ரயிலில், கூடுதலாக பெட்டிகள் இணைக்க, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பயணிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி