| ADDED : மார் 14, 2024 11:12 PM
பெ.நா.பாளையம்:சின்னதடாகம் வட்டாரத்தில் செங்கல் உற்பத்தியை மீண்டும் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, சின்ன தடாகம் செங்கல் உற்பத்தியாளர்கள், அமைச்சர் முத்துசாமியிடம் மனு அளித்தனர்.சின்னதடாகம் வட்டாரத்தில் சோமையம்பாளையம், பன்னீர்மடை, நஞ்சுண்டாபுரம், வீரபாண்டி உள்ளிட்ட ஐந்து ஊராட்சிகளில் உரிய அனுமதியின்றி, செங்கல் சூளைகள் இயங்கின. இதனால் சுற்றுச்சூழல் பாதித்தது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம், கோவை மாவட்ட நிர்வாகம் ஆகியன செங்கல் சூளைகள் தொடர்ந்து இயங்க தடை விதித்தது. இந்நிலையில், ஆனைகட்டிக்கு பெண்கள் இலவச புறநகர் பஸ் இயக்கத்தை துவக்கி வைக்க வந்த அமைச்சர் முத்துசாமியை, செங்கல் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சந்தித்து, மீண்டும் செங்கல் தொழிலை தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனு அளித்தனர். மனுவை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் முத்துசாமி கூறினார்.