உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

மாஜி ராணுவ வீரர் வங்கி கணக்கில் ரூ.7.40 லட்சம் துணிகர மோசடி காந்திபுரம்: மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிக்கராம்பாளையத்தை சேர்ந்தவர் சின்னப்பன் டிசில்வா,71. ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருக்கு கடந்த 9 ம் தேதி ஒரு பார்சல் வந்திருப்பதாக ஒரு மொபைல் எண்ணிலிருந்து தகவல் வந்தது. இதை பெறுவதற்காக வீட்டு முன் காத்திருந்தார். தாமதம் ஆனதால், பார்சல் வந்ததாக அழைப்பு வந்த மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அந்த மர்ம நபரோ, பார்சலை சரிபார்க்க வேண்டியிருப்பதால், குறிப்பிட்ட அந்த மொபைல் எண்ணிற்கு 5 ரூபாய் அனுப்பிவைக்குமாறு கூறியிருக்கிறார். இதனால் மொபைல் போன் இணைப்பை துண்டித்த சின்னப்பன், பணம் அனுப்பவில்லை. மீண்டும் மர்ம நபர் அழைத்த போதும் பதில் அளிக்காமல் இணைப்பை துண்டித்தார். நான்கு நாட்கள் கழித்து, சின்னப்பன் டிசில்வா தன் வங்கி கணக்கை சரி பார்த்த போது, 7.40 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது தெரிய வந்தது. மொபைல் போனில் பேசிய மர்ம நபர் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுத்தது தெரிய வந்தது. சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அவர்கள் விசாரிக்கின்றனர். தனியார் நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கையாடல் சிவானந்தா காலனி: டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோட்டை சேர்ந்தவர் மனோஜ் ஷங்லா,24. மிஸ்ரி ஐ.டி. சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் கம்ப்யூட்டர் உதிரிபாக விற்பனை நிறுவனம் நடத்துகிறார். அதில் ஈரோடு சித்திக் அலி,41 பணிபுரிகிறார். பல்வேறு நிறுவனங்களுக்கு உபகரணம் விற்றது தொடர்பாக 30 லட்சம் ரூபாய் வசூலித்தார். அதை நிறுவனத்திற்கு செலுத்தாமல் கையாடல் செய்தார். மனோஜ் ஷங்லா புகார் அளித்தார். ரத்தினபுரி போலீசார் விசாரிக்கின்றனர். மழைநீர் கால்வாய்க்குள் தவறி விழுந்தவர் பலி மத்தம்பாளையம்: திருநெல்வேலி மாவட்டம், ஆனைகுடியை சேர்ந்தவர் சுரேஷ்,29. கோவை, மத்தம்பாளையத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 17 ம் தேதி இரவில், விநாயகர் கோவில் வீதி அருகில் ரோட்டோரத்தில் நடந்து சென்றார். அப்போது, சாக்கடைக்குள் தவறி விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சை பலனின்றி இறந்தார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர். பள்ளிக்கூடம் அருகில் சிகரெட் விற்றவர் கைது ஆர்.எஸ்.புரம்: கே.கே.புதுார் ஜெயமணி, ஆர்.எஸ்.புரம், தேவாங்கபேட்டை நர்சரி பள்ளி அருகில் பெட்டி கடை வைத்துள்ளார். போலீசார் சோதனையிட்டபோது, பள்ளி அருகில் சிகரெட் விற்றதாக கைது செய்யப்பட்டார். சரவணம்பட்டி, கீரணத்தம் ரோட்டிலுள்ள பெட்டி கடையில் போலீசார் சோதனையிட்டனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற கடைக்காரர் திருப்பதி,31, கைது செய்யப்பட்டார். லாட்டரி விற்றவர் கைது சரவணம்பட்டி போலீசார், காந்திமாநகர் பகுதியில் சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுக்களை விற்ற விளாங்குறிச்சியை சேர்ந்த ஆதி நாராயணன்,44, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 96 லாட்டரி சீட்டுக்கள், பைக், மொபைல் போன், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.பொது இடத்தில் மது குடித்த 11 பேர் மீது வழக்கு காட்டூர்: மாநகர பகுதியில் பொது இடங்களில் மது குடிப்பவர்கள் பிடிக்க போலீசார் சோதனை நடத்தினர். இதில், பல்வேறு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் பொது இடத்தில் மது குடித்ததாக 11 பே ர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலையில் வாலிபரை மிரட்டி ‘ஜிபே’ யில் பணம் பறிப்பு பீளமேடு: கோவை, தண்ணீர் பந்தல்ரோடு, லட்சுமிநகரில் வசிக்கும் அஜ்மல்,26. டைடல் பார்க்கில் பணியாற்றிவருகிறார். அப்பகுதியில் தண்டவாளம் அருகே நடந்து சென்ற போது, இரண்டு நபர்கள், அவரை வழிமறித்து மிரட்டி, மொபைல் போனிலிருந்து ஜிபே வாயிலாக 20,500 ரூபாய் அனுப்ப வைத்தனர். மொபைல் போனை பறித்து கொண்டு தப்பினர். புகாரின் பேரில் பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர். 2 கிலோ கஞ்சா, எடை மிஷினுடன் சோதனை சாவடி அருகே 2 பேர் கைது- சுந்தராபுரம்: எஸ்.எஸ்.ஐ. செந்தில்குமார், பிள்ளையார்புரம் சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார். அவிநாசி கருப்புசாமி, 26, வெங்கடேசன், 31 இருவரும் விற்பனைக்காக, 2.085 கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்து, கஞ்சா, எடை மெஷின் , 30 ஆயிரம் ரொக்கம், கஞ்சா போட்டு தரும் சிறு கவர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தார். போத்தனூர்: எஸ்.ஐ. சிலம்பரசன் ரயில்வே பாலம் பகுதியில் ரோந்து சென்றார். கீழ் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரை விசாரித்தார். தெக்கலூர் சுபாஷ், 28, திண்டுக்கல் விஜய், 30 என தெரிந்தது. விற்பதற்காக வைத்திருந்த இரண்டு கிலோ கஞ்சாவுடன் இருவரையும் கைது செய்தனர். ஆட்டோ பேட்டரியை திருடிய ஆசாமிகள் டிரைவரிடம் சிக்கினர்- வெள்ளலூர்: அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் டிரைவர் ஆஷிக் பிரேஷ், 27, வீட்டின் முன் ஆட்டோவை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். காலையில் வெளியே வந்தபோது. ஆட்டோவில் இருந்த பேட்டரியை காணோம். அப்போதுதான் கழற்றியது போல் தெரிந்தது. வேகமாக தேடியபோது, இருவர் ஒரு பையுடன் செல்வது தெரிந்தது. அவர்களை நிறுத்தி, பையில் பார்த்தபோது, பேட்டரி இருந்ததால், இருவரையும் போத்தனூர் போலீசில் ஒப்படைத்தார். அவர்கள் அதே குடியிருப்பில் வசிக்கும் ஷேக் மொய்தீன் 31, சுரேஷ், 40 என தெரிந்தது. ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரி பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்