உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காட்டுப்பன்றிகள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு !விவசாயிகள் எதிர்பார்ப்பு

காட்டுப்பன்றிகள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு !விவசாயிகள் எதிர்பார்ப்பு

பெ.நா.பாளையம்;கேரள அரசு போல காட்டு பன்றிகள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை வடக்கு, புறநகர் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கரும்பு, வாழை, தென்னை, சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் சின்னதடாகம், மடத்தூர், பாப்பநாயக்கன்பாளையம், நஞ்சுண்டாபுரம், காளையனூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளும், இதே போல நாயக்கன்பாளையம், கோவனூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளும், பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

விவசாயிகள் வேதனை

இதோடு, கடந்த சில நாட்களாக காட்டு பன்றிகளின் நடமாட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், விவசாயிகள் ரத்தக்கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காட்டுப்பன்றிகள் பாதுகாக்கப்பட்ட விலங்கின பட்டியலில் உள்ளதால், அவற்றை கொல்லவோ, விரட்டவோ எங்களால் முடியவில்லை என, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் வட்டார விவசாயிகள் கூறுகையில்,' விவசாய தோட்டங்களுக்குள் புகும் காட்டு யானைகள், 50 சதவீத பயிர் சேதத்தை ஏற்படுத்தினால், காட்டுப்பன்றிகள் கூட்டம், 80 சதவீத பயிர் சேதத்தை ஏற்படுத்துகின்றன. காட்டு யானைகளை பட்டாசு வெடித்து, பலத்த ஓசை எழுப்பி, விரட்டும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபடுகின்றனர். ஆனால், காட்டுப்பன்றிகளின் வருகை தெரியாததால், இரவு மற்றும் அதிகாலை நேரத்தில், 50, 100 எண்ணிக்கையில் வரும் காட்டு பன்றிகள், வாழை, மரவள்ளி உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன. காட்டுப்பன்றிகள், மனிதர்களை எதிர்த்து தாக்கும் ஆற்றல் உடையதால், விவசாயிகள் அதை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை. இதனால் அவை பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன.

பொது மக்கள் அச்சம்

சமீபகாலமாக, காட்டுப்பன்றிகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி தோட்டங்கள், பொதுமக்கள் நடமாடும் பகுதிகளிலும், குடியிருப்புகளிலும், இரவு நேரங்களில் சுற்றத் துவங்கி உள்ளன. இதனால் பொதுமக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. காட்டுப்பன்றிகள் தாக்கி, இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். இப்பிரச்னைக்கு கேரளாவை போல காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்ல, உரிய நடைமுறையை வகுக்க, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

கேரளா சென்ற குழு

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்,' சில மாதங்களுக்கு முன்பு பாலக்காடு மாவட்டத்தில் வருவாய் துறையினர், வனத்துறையினர், உள்ளூர் நிர்வாகிகளுடன் இணைந்து, காட்டு பன்றிகள் கொல்லப்பட்டுள்ளன. அவை எவ்வாறு கொல்லப்பட்டன, அது குறித்தான சட்ட நடைமுறைகள் என்னென்ன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள, சமீபத்தில் தமிழகத்திலிருந்து வனத்துறையினர், விவசாயிகள் உள்ளடங்கிய குழுவினர் கேரளா சென்றனர். அங்கு ஆய்வு மேற்கொண்ட பின்பு அது குறித்தான அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்தான உத்தரவு தமிழக அரசிடம் இருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை