| ADDED : ஜன 28, 2024 11:30 PM
கருமத்தம்பட்டி;கணியூரில் நடந்த விழாவில், உறவுகள் அறக்கட்டளை சார்பில், சமூக ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.கணியூர் ஊராட்சியில் செயல்படும் உறவுகள் அறக்கட்டளையினர், கொரோனா பெருந்தொற்று காலத்தில், உணவு வழங்குதல், மருத்துவ வசதி செய்து கொடுத்தல் உள்ளிட்ட பல உதவிகளை செய்தனர். தொடர்ந்து, சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு துறைகளில் சமூக சேவை செய்து வரும், ஆர்வலர்களுக்கு, 'உறவுகள் விருது - 2024' வழங்க முடிவு செய்தனர்.கவுசிகா நதிக்கு உயிரூட்டிய செல்வராஜ், சூலுார் நண்பர்கள் ரத்த தான குழு நிறுவனர் தர்மராஜ், பசுமை பரப்பை அதிகரித்து வரும் கரடிவாவி ஆசிரியர் உதயகுமார், கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர் சக்திவேல், ஆதரவற்றோருக்கு உணவு அளித்து வரும், பாரதி பசியாற உணவு அறக்கட்டளை நிறுவனர் வேலுசாமி, 25 முறைக்கு மேல் ரத்த தானம் செய்த செந்தில்குமார், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம், குப்பையை உரமாக்கும் பட்டதாரி இளைஞர்கள் சரண்ராஜ், பிரசாத் ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான விருதுகளை, ராக் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ரவீந்திரன் வழங்கி பாராட்டினார்.அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.