வடவள்ளி;வடவள்ளி பகுதியில் குப்பையை அகற்ற பல முறை புகார் தெரிவித்தாலும், மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், வடவள்ளி பகுதி நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகின்றது. இங்கு, நாளுக்கு நாள் குடியிருப்புகளும், நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில், 38 மற்றும் 39வது வார்டு, வடவள்ளி பகுதியில் உள்ள மகாராணி அவென்யூ, சிறுவாணி ரோடு, பொங்காளியூர், சுண்டப்பாளையம், பொம்மணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளும், சாலையோரங்களிலும் எப்பொழுதும் குப்பைக்குவியலை காண முடிகிறது.சில பகுதிகளில், 15 நாட்களுக்கு ஒரு முறையே குப்பை அள்ளப்படுகிறது. இதில், பிளாஸ்டிக் மற்றும் உணவு கழிவுகளே அதிகம். அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடும் ஏற்பட்டு வருகிறது.சாலையோரங்களில் குப்பை குவிந்துள்ளது. அந்த குப்பை, காற்று வீசும்போது, சாலை முழுவதும் பரவி வருகிறது. குப்பையில் உள்ள உணவு கழிவுகளை உண்ண மாடு, ஆடு போன்ற கால்நடைகள் குப்பைமேடுகளில், உண்டு செல்கின்றன. பலமுறை புகார் அளித்தும், இப்பிரச்னைக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.எனவே, குறைந்தது 2 நாட்களுக்கு ஒரு முறையாவது குப்பையை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.