விருத்தாசலம்: கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த இருப்பு கிராமத்தில், தமிழக வனத்துறைக்கு சொந்தமான முந்திரி காடு உள்ளது. இங்குள்ள ஒரு முந்திரி மரக்கிளையில், புடவை கட்டப்பட்டிருந்த நிலையில், அருகே மண்டை ஓடு, ஒரு எலும்பு துண்டு கிடந்தது.அப்பகுதியில் முந்திரி கொட்டை எடுக்க சென்றவர்கள் கொடுத்த தகவலில், ஊ.மங்கலம் போலீசார் மற்றும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி தடயவியல் நிபுணர் நேரில் சென்று தடயங்களை சேகரித்தனர்.மரத்தில் கட்டப்பட்டிருந்த புடவை, மண்டை ஓடு, எலும்பு துண்டு ஆகியவை சென்னை, மயிலாப்பூர் தடயவியல் துறை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.முதல்கட்ட விசாரணையில், மரத்தில் கட்டப்பட்டிருந்த புடவை, கடந்தாண்டு டிசம்பரில், காணாமல் போன கிழக்கு இருப்பு கிராமத்தை சேர்ந்த முத்துவேல் மனைவி பவுனாம்பாள், 67, என்பவர் அணிந்திருந்தது என, தெரிந்தது. அவரது மகன் பரமசிவம் அப்போது கொடுத்த புகாரில் பெண் மாயம் என, ஊ.மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில், அவரது புடவையும், மண்டை ஓடு, எலும்புத்துண்டு ஆகியன கிடைத்ததால், அது காணாமல் போன பவுனாம்பாள் உடல் பாகங்களா என, தடயவியல் ஆய்வுக்கு பின்னரே தெரிய வரும். அதன் பிறகு தான் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது நகை பறிப்பு சம்பவத்தில் கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.