| ADDED : ஜூலை 13, 2024 12:44 AM
கடலுார்: கடலுார் மாவட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆனி மாத கடைசி முகூர்த்த நாள் என்பதால் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டது.முகூர்த்த நாட்களில் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும். இதனால், அன்றைய நாட்களில் பொதுமக்கள் பத்திரப்பதிவிற்காக கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்வது வழக்கம். அதன்படி, ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த நாளான நேற்று அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.இதனால் தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ், ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்கள். மேலும்,அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்கள் மற்றும் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.அதன் அடிப்படையில் கடலுார் மாவட்டத்தில் சிதம்பரம், கடலுார், விருத்தாசலம் பகுதிகளை தலைமையிடமாக கொண்டு 9 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அனைத்து அலுவலகங்களிலும் வழக்கமாக வழங்கப்படும் 100 டோக்கன்களுக்கு பதிலாக நேற்று 150 டோக்கன்கள் வழங்கப்பட்டது. ஆனால் பல சார்பதிவாளர் அலுவலங்களில் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.