உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தி.மு.க., -- டவுன் பஞ்., தலைவர் மீது கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம்

தி.மு.க., -- டவுன் பஞ்., தலைவர் மீது கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம்

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, தி.மு.க., டவுன் பஞ்., தலைவர் மீது, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி, செயல் அலுவலரிடம் மனு அளித்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி டவுன் பஞ்.,ல் மொத்தம், 15 வார்டுகள் உள்ளன. இதில் கடந்த உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., 12; அதன் கூட்டணி கட்சிகளான வி.சி.,- காங்., தலா, ஒரு இடங்களில் வெற்றி பெற்றன. தி.மு.க.,வை சேர்ந்த மாரி என்பவருக்கு, சீட் கிடைக்காததால், அவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின், தி.மு.க.,வில் இணைந்தார்.தொடர்ந்து, தி.மு.க., கவுன்சிலர்கள் ஆதரவுடன், மாரி டவுன் பஞ்., தலைவராகவும், தி.மு.க.,வை சேர்ந்த ரவி துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். டவுன் பஞ்., தலைவர், கவுன்சிலர்கள் இடையே பல ஆண்டாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், துணைத்தலைவர் உட்பட தி.மு.க.,வின் , 8 கவுன்சிலர்கள், கூட்டணி கட்சிகளான, காங்., - வி.சி., கவுன்சிலர்கள் என, மொத்தம், 10 பேர், டவுன் பஞ்., தலைவர் மாரி மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி, நேற்று முன்தினம் டவுன் பஞ்., செயல் அலுவலர் ரவிக்குமாரிடம் பிரமாண பத்திரம் அளித்தனர்.அதில், அவர்கள் கூறியிருப்பதாவது: டவுன் பஞ்., தலைவர் மாரி, கவுன்சிலர்களிடம் தவறான வார்த்தைகளில் பேசுவதுடன், டவுன் பஞ்., வரிப்பணத்தை தேவையில்லாமல் செலவு செய்கிறார். பணியாளர்களை தன் சொந்த வேலைக்கு பயன்படுத்துவதுடன், நிலங்களை வாங்கி அந்த இடத்திற்கு, டவுன் பஞ்., நிதியில் தார்ச்சாலை போடுவது, பைப் போடுவது என முறைகேடாக செய்து வருகிறார். கவுன்சிலர்கள் மற்றும் துணைத்தலைவரிடம் ஆலோசிப்பதில்லை. எனவே, மாரியை தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்ய கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு, அதில் கூறியுள்ளனர்.இது குறித்து டவுன் பஞ்., தலைவர் மாரி கூறியதாவது:நான் எந்த தவறும் செய்யவில்லை. கட்சிக்கு எதிராக நடக்கவில்லை. ஆனால், என்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்துள்ளனர். ஏற்கனவே, இரு முறை கொடுத்தனர். இது, 3வது முறை. அவர்கள், என்னை தவறாக பயன்படுத்த பார்த்தார்கள். அதற்கு நான், ஒத்து வரவில்லை. இதனால், காழ்ப்புணர்ச்சியால், என் மீது வீண் பழி சுமத்துகின்றனர். நான் தவறு செய்திருந்தால் அரசு என் மீது நடவடிக்கை எடுக்கட்டும். அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.இதனிடையே, கவுன்சிலர்களை சமரசம் செய்யும் பணியில், தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் பழனியப்பன் ஈடுபட்டுள்ளதாக, அக்கட்சி நிர்வாகிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை