| ADDED : மே 04, 2024 06:31 AM
மனித வாழ்வில் நாள்தோறும் வணிகம் என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இதை மையப்படுத்தி துவக்கத்தில் முன்னோர்கள் ஆங்காங்கே கிராம பகுதிகளில் வார சந்தைகளை தோற்றுவித்தனர். எடை அளவுகள் சரியாக உள்ளதா என பரிசோதிக்க அவ்வப்போது அவற்றுக்கு முத்திரை இடப்பட்டு சோதிக்கப்பட்டன. இதற்காக மாவட்டம் தோறும் பல்வேறு இடங்களில் முத்திரையிடும் மையங்கள் செயல்படுகின்றன. இருந்தபோதும் வணிக நிறுவனங்கள் தவிர்த்து பிற ரோட்டோர கடைகள்,வார சந்தைகளில் உள்ள தராசுகள் ,எடை கற்களை முறையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் எடை குறைவாக வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் கொடுக்கும் நிலை உள்ளது. மாவட்டத்தில் கொடைக்கானல், திண்டுக்கல், வத்தலக் குண்டு, கன்னிவாடி, சித்தரேவு, சித்தையன் கோட்டை, ஆத்துார், வடமதுரை, வேடசந்துார், பழநி, குஜிலியம்பாறை, நத்தம், சின்னாளப்பட்டி, செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வார சந்தைகள் செயல்படுகின்றன. இவற்றில் வியாபாரிகள் தாங்கள் வைத்திருக்கும் தராசுகள் , எடைக்கற்களுக்கு முத்திரை இடப்படாத நிலையேஉள்ளது. ரோட்டோர பழ கடைகள், இதர விற்பனை செய்யும் மையங்களிலும் இதுபோன்ற நிலை உள்ளது. துறை அதிகாரிகள் தராசுகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.