உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இலவச வேட்டி-சேலை தயாரிப்பில் என்னமோ நடக்குது? காட்டன் பாகு நுால் கேட்டு கதறும் விசைத்தறியாளர்்

இலவச வேட்டி-சேலை தயாரிப்பில் என்னமோ நடக்குது? காட்டன் பாகு நுால் கேட்டு கதறும் விசைத்தறியாளர்்

ஈரோடு: ஈரோட்டில் உள்ள, தமிழ்நாடு கூட்டுறவு துணி நுால் பதனிடும் ஆலை வளாகத்தில், கைத்தறி துறை இயக்குனர் சண்முகசுந்தரம் தலைமையில், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் குறித்த முன்னேற்பாடு கூட்டம் நடந்தது. கைத்தறி கூடுதல் இயக்குனர் தமிழரசி, இணை இயக்குனர்கள் கணேசன் (கைத்தறி), முனுசாமி (சீருடை), துணை இயக்குனர் சிவகுமார், உதவி இயக்குனர்கள் தமிழ்செல்வன், பழனிகுமார் மற்றும் விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டம் குறித்து அதிகாரிகள் மற்றும் விசைத்தறியாளர் கூறியதாவது:வரும் பொங்கல் பண்டிகையின்போது மக்களுக்கு வழங்குவதற்காக இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு இதுவரை பாகு நுால் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பாலியஸ்டர் நுால் மூலம் இலவச சேலை உற்பத்தி செய்ய அரசு திட்டமிட்டிருந்தது. விசைத்தறிகளில் காட்டன் நுாலில் மட்டுமே விரைவான உற்பத்தி செய்ய இயலும். பாலியஸ்டர் நுாலால் உற்பத்தி செய்வது சிரமம். காட்டன் நுால் மூலம் ஒரு நாளைக்கு, 4.20 லட்சம் சேலைகள் உற்பத்தி செய்யலாம். ஆனால், பாலியஸ்டர் நுால் மூலம், 1.20 லட்சம் சேலை மட்டுமே உற்பத்தி செய்ய இயலும். ஏற்கனவே, ஒன்றரை மாதத்துக்கு மேல், இப்பணி துவங்க தாமதமாகிவிட்டது. இந்நிலையில் மூன்றில் ஒரு பங்கு உற்பத்தி தினமும் குறையும்படி பாலியஸ்டர் நுால் பயன்படுத்தினால், நவ.,30க்குள் உற்பத்தியை நிறைவு செய்ய இயலாது. அதை பயன்படுத்தி, அரசு சார்பில், வெளியே இருந்து சேலை, வேட்டி வாங்கும் நிலை ஏற்படும். எனவே இந்தாண்டு காட்டன் நுால் மூலம் உற்பத்தி செய்யலாம். அடுத்தாண்டு ஏப்., - மே மாதத்தில் பாலியஸ்டர் நுாலை வழங்கி உற்பத்தியை துவங்கலாம். கடந்த, 2019க்கு பின் கூலி உயர்த்தப்படவில்லை. உடனடியாக கூலி உயர்த்த வலியுறுத்தப்பட்டது.அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன் மற்றும் விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பு, சொசைட்டி, சைசிங் அமைப்பினர், டெண்டர் எடுத்தவர்கள் சென்னையில் இன்று கூட்டம் நடத்தி, கைத்தறித்துறை அமைச்சர் காந்தியிடம் முடிவை தெரிவிக்க உள்ளனர். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ