| ADDED : ஜூலை 26, 2024 12:45 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், மாவோயிஸ்ட்களை போலீசின் பல்வேறு பிரிவுகள், அடர்ந்த வனப்பகுதி, மலை கிராம பகுதிகளில் தேடி வருகின்றனர். கடந்த, 18ம் தேதி காலை கேரளாவில் இருந்து ரயிலில் இரு மாவோயிஸ்டுகள் ஈரோடு வந்தனர். ஸ்டேஷன் முன்புறம் ஒரு லாட்ஜில் தங்கியுள்ளனர். பை வாங்குவதற்காக மாநகருக்கு சென்றுள்ளனர். பை வாங்கிய பின் பல இடங்களில் சுற்றியுள்ளனர். 18ம் தேதி இரவு நாகர்கோவில் செல்லும் ரயிலில் ஏறி சென்றுள்ளனர். இரு மாவோயிஸ்டுகள் ஈரோடு வந்து சென்றது, மாவட்ட போலீஸ் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.போலீசார் கூறியதாவது:கடந்த, 18ம் தேதி இரு மாவோயிஸ்டுகள் வந்து சென்றனர். அவர்கள் மொபைல்போன் தொடர்புகள் கண்காணிக்கப்பட்டன. மத்திய, மாநில பிரிவு போலீசார் கண்காணித்தனர். அவர்களை நிழல்போல் பின் தொடர்ந்தோம். எதற்காக ஈரோடு வந்து சென்றனர் என தெரியவில்லை. இதுபற்றி விசாரித்து வருகிறோம். சந்தேக நபர்களின் மொபைல் போன் எண்கள் கண்காணிப்பில் உள்ளது. இவ்வாறு கூறினர்.ஆனால், வந்து சென்றது யார் என்ற விபரத்தை மட்டும் போலீசார் கூற மறுத்து விட்டனர்.