| ADDED : ஆக 18, 2024 02:37 AM
ஈரோடு: கொடுமுடி அருகே நகப்பாளையம் காலனி, குப்பன் மனைவி சரசாள் மற்றும் கிராம மக்கள், தலித் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு, நேற்று வந்து மனு வழங்கினர். மனுவில் கூறியதாவது: நான், விவசாய கூலி வேலை செய்து வருகிறேன். எனது கணவர் குப்பன், 20 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். எனக்கு முருகேசன், 41, என்ற மகன், மகள் கவுதமி, 36, உள்ளார். விருப்பம்பாளையத்தில் ஒரு மில்லில், 10 ஆண்டாக பணி செய்தார். ஆறு மாதமாக வேறிடத்துக்கு வேலைக்கு சென்றார். கடந்த, 13ல் மகன் முருகேசனை, அவர் ஏற்கனவே வேலை செய்த கம்பெனி ஊழியர் ஒருவர், கம்பெனியில் அழைப்பதாக கூறி அழைத்து சென்றார். திரும்பி வந்தபோது பைக்கை பறித்து வைத்து கொண்டதாக அழுதார். சிறிது நேரத்தில் அக்கம்பெனி உரிமையாளரே, தனது இறப்புக்கு காரணம் என எழுதி வைத்துவிட்டு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொடுமுடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்து, உடலை வாங்க மறுத்துவிட்டேன். கொடுமுடி போலீசார், தற்கொலை வழக்காக பதிவு செய்து, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவு செய்தனர். ஆனாலும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. உண்மை குற்றவாளிகள் கைது செய்ய வேண்டும். உரிய காரணத்துடன் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அதுவரை எனது மகன் உடலை பெற மாட்டோம். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.