| ADDED : பிப் 15, 2024 11:03 AM
ஈரோடு: ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்களின், 40 நாட்கள் தவக்காலம், சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கியது.கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி மார்ச், 24ம் தேதி குருத்தோலை ஞாயிறு, 28ம் தேதி புனித வியாழன், 29ம் தேதி புனித வெள்ளி, 31ல், ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பாக கிறிஸ்தவர்கள், 40 நாட்கள் உபவாசம் (தவம்) கடைப்பிடிப்பது வழக்கம். தினமும் ஏசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை நினைவு கூர்ந்து வழிபாடு நடத்தப்படும்.தவக்காலம் நேற்று தொடங்கியதையொட்டி, அனைத்து ஆர்.சி., சி.எஸ்.ஐ., உள்ளிட்ட தேவாலயங்களில் சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. ஈரோடு புனித அமலஅன்னை தேவலாயத்தில் நடந்த சாம்பல் புதன் சிறப்பு வழிபாட்டில், பங்கு தந்தையும், ஈரோடு மாவட்ட முதன்மை குருவுமான ஆரோக்கியராஜ் ஸ்டீபன், உதவி பங்கு தந்தை அந்தோணிராஜ் அகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட குருத்தோலைகளை சுட்டு சாம்பல் செய்து, அதனை தேவலாயத்திற்கு வந்திருந்த கிறிஸ்தவர்கள் நெற்றியில் சிலுவை அடையாளமாக பூசப்பட்டது. ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.