| ADDED : ஏப் 29, 2024 06:58 AM
ஈரோடு : கொடிநாள் வசூலில் மாணவனை கணக்கிட்டு இலக்கு நிர்ணயித்து, பெருந்தொகையை செலுத்த உத்தரவிடப்பட்டது, அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், ஈரோடு யூனியனுக்கு, 2023ம் ஆண்டு முப்படை கொடிநாள் வசூல் தொகை இலக்கு, 60,315 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொகையை ஆன்லைனில் செலுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அரசு பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவருக்கு, 4.15 ரூபாய் வீதம் கணக்கிட்டு தொகையை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 14 யூனியனில் உள்ள பள்ளிகளுக்கு கொடி நாள் வசூல் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தலைமை ஆசிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கொடி நாள் வசூலுக்காக தலைமை ஆசிரியர்கள் தங்களால் முடிந்த தொகையை வேண்டுமானால் கொடுக்கலாம். ஆனால் மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டு வசூலிப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: மாணவர் ஒருவருக்கு தலா, 4.15 ரூபாய் அடிப்படையில் கொடி நாள் வசூல் தொகையை துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆயிரம் பேர் பயிலும் பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் பெரும் தொகையை செலுத்த வேண்டி இருக்கும். இதை மாணவர்களிடம் வசூலிக்க பள்ளி கல்வித்துறை அனுமதிக்குமா? தலைமை ஆசிரியர்கள் மீது பெருஞ்சுமையை சுமத்தியுள்ளனர். இது ஏற்கத்தக்கதல்ல. ஏற்கனவே ஸ்மார்ட் கிளாஸ், ஹை டெக் லேப், அடல் லேப்களுக்கு பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்ட் சேவைக்கு பெருந்தொகையை செலுத்தி வருகிறோம். இந்நிலையில் கொடிநாள் வசூல் பெயரில் பெருந்தொகை திணிக்கப்பட்டுள்ளது. இதை அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.