| ADDED : மார் 08, 2024 07:21 AM
ஈரோடு: மோடி மீண்டும் பாரத பிரதமராக வேண்டி, இந்து மக்கள் கட்சி சார்பில், தமிழகம் முழுவதும் தெருமுனை பிரசாரம் துவக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் அறச்சலுார், ஈரோட்டில் நேற்று மாலை தெருமுனை பிரசாரம் நடந்தது. இதில் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றி பெற, பிரசார பயணத்தை துவக்கியுள்ளோம். தெருமுனை கூட்டம், மத்திய அரசின் சாதனை விளக்க நிகழ்ச்சி நடக்கிறது. தமிழகம், புதுச்சேரியை புரட்டி எடுக்கும் மோசமான சம்பவம் நடந்துள்ளது. போதையில் ஒரு கும்பல், சிறுமியை சீரழித்துள்ளனர். இதற்கு போதை கலாசாரமே காரணம். திராவிட மாடல் தி.மு.க.அரசு, போதை பொருள் கடத்தும் நபர்களை தங்கள் கட்சி பொறுப்பில் வைத்துள்ளது. எதிர்கட்சியாக இருந்தபோது சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பதாக ஸ்டாலின் கூறினார். தற்போது தி.மு.க., நிர்வாகியான ஜபார் சாதிக் குறித்து பேச மறுக்கிறார். இவ்விவகாரம் குறித்து என்.ஐ.ஏ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தமிழகத்துக்கு பிரதமர் மோடியின் வருகை நன்மை பயப்பதாகவே அமைந்துள்ளது. தமிழகத்தில் மோடி எதிர்ப்பு பிம்பம் உடைந்து விட்டது. கழகங்கள் இல்லாத தமிழகம் உருவாக வேண்டும் என்பது மக்கள் விருப்பம். லஞ்ச ஊழலை ஒழிக்க திராவிட கட்சிகள் இல்லாத நிலை உருவாக வேண்டும். நாட்டுக்கு நல்லது நடந்து விடக்கூடாது என்பதுதான் 'இண்டியா' கூட்டணி எண்ணம். இவ்வாறு அவர் கூறினார். அவருடன் மாநில செயலாளர் முருகேசன் இருந்தார்.