புன்செய்புளியம்பட்டி:ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வனப்பகுதியில் மலை குன்றுகளில் புல்வெளிகளும், அவற்றுக்கு இடையே தாழ்வான பகுதியில், மரங்களும் நீர்நிலைகளுடன் கூடிய பசுமை வனப்பகுதிகளும் உள்ளன.இந்த பசுமை வனத்தில், நீர் ஆதாரங்கள் நிறைய உள்ளன. இப்பகுதியில், வன உயிரினங்களுக்கு தடையின்றி உணவு, குடிநீர் கிடைத்து வருகிறது. வனவிலங்குகள், குறிப்பாக யானைகள், வெப்பம் அதிகம் உள்ள பகல் நேரத்தில் தாழ்வான வனப்பகுதியிலும், மற்ற நேரங்களில் புல்வெளிகளிலும் உலா வருகின்றன.கோடையில் பல்வேறு பகுதிகளிலிருந்தும், உணவு, குடிநீர் தேடி யானைகள் உட்பட பல விலங்குகள் படையெடுக்கின்றன.கோடை துவங்கும் முன்பே சுட்டெரிக்கும் வெயிலால் வனப்பகுதியிலுள்ள மரங்கள் பசுமையை இழந்து கருகி வருகின்றன. கோடைக்கு முன்பே நீர்நிலைகள் வறண்டு வறட்சி துவங்கியுள்ளது.மரங்கள், செடிகள் கருகியதால், வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வனத்தை சார்ந்து வாழும் யானைகள், போதிய உணவு, தண்ணீர் கிடைக்காமல், வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைந்து, விவசாய பயிர்களை நாசம் செய்வது அதிகரித்துள்ளது.இதைத் தடுக்க வனத்துறையினர், வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலங்களிலும், குடியிருப்பை சுற்றி அகழி வெட்டியும் தீர்வு கிடைக்கவில்லை. வனப்பகுதியில் உள்ள குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டுவிட்டதால் அதில் நீர் நிரப்ப கோரிக்கை எழுந்துள்ளது.பவானிசாகர் பகுதி விவசாயிகள் கூறுகையில், 'பவானிசாகர் வனப்பகுதியை பொறுத்தவரை பல இடங்களிலும் அகழி வெட்டியும் கூட யானைகள் ஊருக்குள் வருகின்றன.'வனவிலங்குகளுக்கான உணவு, குடிநீர் தேவையை வனத்திலேயே பூர்த்தி செய்ய வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் செயற்கையாக நீர் நிரப்ப வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.'இதை செயல்படுத்தினால் மட்டுமே யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க முடியும்' என்றனர்.
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் சரிவு
பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி உயரம்; 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள. 2.47 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால், கடந்த ஜன.,7 முதல், கீழ்பவானி இரண்டாம் போக புன்செய் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறையத் தொடங்கியது.நேற்று முன்தின நிலவரப்படி அணை நீர்வரத்து, 142 கன அடியாக இருந்தது. மேலும் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால், அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது. அணையின் நீர்மட்டம், 73.71 அடி; நீர் இருப்பு, 12.5 டி.எம்.சி., ஆக உள்ளது.அணையில் இருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கன அடி தண்ணீர், அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனத்துக்கு, 700 கன அடி தண்ணீர், குடிநீர் தேவைக்காக, 100 கன அடி தண்ணீர் என மொத்தம், 3,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்வரத்தை விட, வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்தாண்டு இதே நாளில் பவானிசாகர் அணை நீர்மட்டம், 98.19 அடி; நீர் இருப்பு, 27.3 டி.எம்.சி.,யாக இருந்தது குறிப்பிடத்தக்கது.