உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாதக்கணக்கில் நடக்காத மருத்துவ முகாம்; மாற்றுத்திறனாளிகள் தவியாய் தவிப்பு

மாதக்கணக்கில் நடக்காத மருத்துவ முகாம்; மாற்றுத்திறனாளிகள் தவியாய் தவிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவமுகாம் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நீண்ட நாட்களாக நடத்தப் படாமல் இருப்பதால் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில், வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. முகாமில் டாக்டர்கள் உரிய பரிசோதனை செய்து, அதில் 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு மருத்துவ சான்றிதழும், தேசிய அடையாள அட்டை வழங்கவும் பரிந்துரை செய்வர்.மாவட்டம் முழுவதும் இருந்து மாற்றுத்திறனாளிகள் பலரும் பங்கேற்று அடையாள அட்டை பெற்று அரசின் திட்ட பயன்களை பெற்று வருகின்றனர்.ஆனால் இவ்வாண்டு துவக்கம் முதலே பல்வேறு காரணங்களால் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக நடத்தப்படும் மருத்துவ முகாம் தொடர்ந்து தடைபட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 2024 மாதம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டதால், தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் நடத்தப்படவில்லை. தொடர்ந்து, மார்ச் 7ம் தேதியில் இருந்து மருத்துவமுகாம் தொடரும் என அறிவிக்கப்பட்டது.ஆனால் தொடர்ந்து மார்ச் மாத துவக்கத்தில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பானதால், மீண்டும் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் மாதக்கணக்கில் தடைபட்டு போனது.ஜூன் 4 தேர்தல் முடிவுகள் அறிவிப்புக்குப்பின்னரே மீண்டும் மருத்துவ முகாம் நடைபெறும் என மாற்றுத்திறனாளி நல அலுவலர் தெரிவித்துள்ளார்.இதனால் இவ்வாண்டின் துவக்கம் முதலே மாதக்கணக்கில் மருத்துவ முகாம் நடத்தப்படாமல் அலைக்கழிக்கப்பட்டு வருவதால் மருத்துவ உதவிகள் பெற முடியாமலும், அரசின் திட்ட பயன்களை பெருவதற்கு தகுதி பெற முடியாமலும் கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பலரும் பாதிப்படைந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்