| ADDED : நவ 20, 2025 05:41 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் நடந்த குழு போட்டியில் வெற்றி பெற்ற 390 மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி கல்வி துறை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 14,17,19 வயது என மூன்று பிரிவுகளின் கீழ் மாவட்ட அளவிலான குழு மற்றும் தடகள விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் மாவட்ட அளவில் வாலிபால், கபடி, கோ-கோ, கைபந்து, ஹாக்கி, கால்பந்து, எறிபந்து, கூடைப்பந்து, இறகு பந்து, பூப்பந்து ஆகிய குழு விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிகள் அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றன. இதனையடுத்து 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான மாநில அளவிலான போட்டிகள் இன்று 20ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் நடக்கிறது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் மாவட்டத்தில் இருந்து 130 மாணவிகள் என மொத்தம் 390 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து 14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு ராணிபேட்டை மாவட்டத்திலும், 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு திருச்சி மாவட்டத்திலும் ஓரிரு மாதங்களில் அடுத்தடுத்து போட்டிகள் நடக்கவுள்ளன. மாநில அளவிலான போட்டிகளுக்கு சி.இ.ஓ., கார்த்திகா உத்தரவின் படி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் மேற்பார்வையில், அந்தந்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளி மாணவிகளை அழைத்து செல்கின்றனர்.