காஞ்சிபுரம், : காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய 5 தாலுகாக்கள் உள்ளன. இதில், உத்திரமேரூர், காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய தாலுகாக்களில், அதிக விவசாயம் நடந்து வருகின்றன. மணல் மற்றும் சவுடு மண் நிலங்களில், வண்டல் மண் கொட்டி உழவு செய்தால், மண்ணின் தன்மை மாறுபடும் போது, விவசாயத்தில் நல்ல மகசூலை ஈட்ட முடியும்.இதனால், விவசாயிகளுக்கு ஏரிகளில் வண்டல் மண் எடுக்க, இலவசமாக அனுமதி வேண்டும் என, விவசாயிகள் அடிக்கடி கலெக்டரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.ஏற்கனவே, ஏரிகளில் வண்டல் மண் எடுக்க தடை விதிப்பு அமலில் இருப்பதால், விவசாயம், மண்பாண்ட தொழில் மற்றும் கலை நயமிக்க பொருட்களை செய்வதில் சிக்கல் நீடித்து வந்தன.சிறு கனிம சலுகை விதிகள் படி, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரிகளில், வண்டல் மற்றும் சாதாரண மண் எடுக்க அனுமதிக்கலாம் என, சமீபத்தில் மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தன.குறிப்பாக, நீர் பிடிப்பு அல்லாத பகுதிகள். ஏரி வரைபடத்தில் அளவீடு மற்றும் குறியீடு செய்யப்பட்ட பகுதிகளில், ஒரே இடத்தில் மண் எடுக்காமல், பரவலாக எடுக்க வேண்டும் உள்ளிட்ட 25 கட்டுப்பாடு விதிகளின் அடிப்படையில், மண் எடுத்துக் கொள்ளலாம். தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளின் அடிப்படையில், நிபந்தனைகளின்படி மண் எடுக்கலாம் என, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில், 186 ஏரிகளில் மண் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளன. இது, 30 நாட்களுக்கு மண்ணை அள்ளி முடிக்க வேண்டும் என, நிபந்தனையும் விதிக்கப்பட்டு உள்ளது. துவக்க விழாவை நேற்று, தமிழகம் முழுதும், முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.அதை தொடர்ந்து, காஞ்சிபுரம் தாலுகா, திருபுட்குழி குறு வட்டம், சிறுணை கிராம ஏரியில் மண் அள்ளும் பணியை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.
ஏரிகளின் எண்ணிக்கை விபரம்
தாலுகா ஏரிகள்காஞ்சிபுரம் 59வாலாஜாபாத் 40உத்திரமேரூர் 87மொத்தம் 186