| ADDED : ஜூலை 17, 2024 11:39 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம்,திருவானைக்கோவிலில், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மற்றும் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம் சார்பில் பாரம்பரிய சிறுதானிய திருவிழா நேற்று நடந்தது.ஆடி மாதம் நேற்று தொடங்கியதை அடுத்து, தமிழர்களின் பாரம்பரிய சிறுதானிய பயிர் வகைகள் குறித்து இந்த விழா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.விழாவையொட்டி, திருவானைக்கோவில் மண்ணுளியம்மன் கோவில் வளாகத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள்ஒன்றிணைந்து, வண்ண கோலமிட்டனர்.பாரம்பரிய நெல்விதைகள் மற்றும் வேர்க்கடலை, பச்சைப்பயிறு, கேழ்வரகு, உளுந்து, கம்பு, சோளம், பனிவரகு, சாமை உள்ளிட்ட சிறுதானிய விதைகளை பெண்கள் தங்களது வீடுகளில் இருந்து எடுத்து வந்து, கோவில் வளாகத்தில் வைத்து சிறுதானிய உணவு மீட்டெடுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அதைத் தொடர்ந்து சிறுதானிய விதைகளை பெண்கள் தங்கள் கைகளில் ஏந்தி, அங்கிருந்து ஊர்வலமாக அப்பகுதி ஈஸ்வரன் கோவில் வளாகத்திற்கு வந்தடைந்தனர்.அப்போது பாரம்பரிய விதைகளை பாதுகாப்போம், விளைநிலங்களை அழிக்காமல் இயற்கை விவசாயத்தை பராமரிப்போம், நிலத்தடி நீரை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என கோஷமிட்டு, கும்மி பாடல்கள் பாடியும், நடனமாடியும் அப்பகுதி முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு, உத்திரமேரூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் உஷாராணி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்று பேசினர்.காலநிலை மாற்றத்தை தாங்கி வளரக்கூடிய சிறுதானிய பயிர்கள் குறித்தும் அதை பயிரிடும் முறைகள் குறித்தும் அப்பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி சம்பத்குமார் விளக்க உரையாற்றினார். பெண்கள் இணைப்பு குழு நிர்வாகி விஜயா நன்றி கூறினார்.