| ADDED : ஆக 05, 2024 02:02 AM
கரூர், கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், நில நிர்வாக ஆணையர் பழனிசாமி தலைமை வகித்து பேசியதாவது:கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சமத்துவபுரம் புனரமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்., செயல்படுத்தப்பட்டு வரும் நமக்கு நாமே திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், துாய்மை பாரத இயக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் சமூக கழிப்பறைகள், தனி நபர் இல்ல கழிப்பறைகள் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.கலெக்டர் தங்கவேல், எஸ்.பி., பிரபாகர், டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா உள்பட பலர் பங்கேற்றனர்.