உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போலி பயிற்சியாளர் சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு

போலி பயிற்சியாளர் சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அருகே, மேலும் ஒரு பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில், போலி பயிற்சியாளர் சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கை போலீசார் பதிந்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் தனியார் பள்ளியில், இரு வாரங்களுக்கு முன் நடத்தப்பட்ட போலி என்.சி.சி., முகாமில், 12 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக, போலி பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான சிவராமன், 35, கைது செய்யப்பட்டார்.மேலும் ஐந்து பயிற்சியாளர்கள், குற்றத்தை மறைக்க முயன்ற பள்ளி நிர்வாகத்தினர் நான்கு பேர் உட்பட, 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் சில தனியார் பள்ளிகளும், பதிவே இல்லாத தங்கள் பள்ளிகளில் என்.சி.சி., முகாம் நடத்தியதாகவும், அங்கும் சிவராமன் மாணவியருக்கு பயிற்சி என்ற பெயரில், பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. சிவராமன் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.கிருஷ்ணகிரி அருகிலுள்ள தனியார் பள்ளியில், இந்தாண்டு ஜனவரியில், இதேபோல என்.சி.சி., முகாம் என்ற பெயரில் சிவராமன் நுழைந்துள்ளார். அப்பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.தற்போது, சிவராமன் கைது செய்தியை பார்த்த மாணவி, தனக்கு நடந்த கொடுமை குறித்து அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின்படி, சிவராமன் மீது, மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிந்துள்ளனர்.இதுதவிர, 36.62 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திலும், போலி ஆவணங்கள் கொடுத்து பணம் பறித்ததாகவும் புகார்கள் வந்துள்ளன. இதுவரை சிவராமன் மீது, இரு போக்சோ மற்றும் ஒரு பணமோசடி வழக்கு பதிந்துள்ள போலீசார், மற்ற புகார்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

சிறப்பு குழு விசாரணை துவக்கம்

பள்ளி மாணவி பலாத்கார சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஐ.ஜி., பவானீஸ்வரி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் மற்றும் சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான பல்நோக்கு குழுவினர், நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுகூட்டம் நடத்தினர்.தொடர்ந்து அவர்கள், நிருபர்களிடம் கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒரு தனியார் பள்ளியில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து அனைவரையும் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடையவர்கள், குற்றத்தை மறைத்தவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கவும், 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனால், மாவட்ட நிர்வாகம், சிறப்பு புலனாய்வு குழு, சமூகநல அமைப்பின் பல்நோக்கு குழு ஆகியவை இணைந்து விசாரணை நடத்தும். பாதிக்கப்பட்ட மாணவியுடன் மற்ற மாணவியர், பெற்றோர், ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் தரப்பட உள்ளது. ஏற்கனவே ஒரு முறை கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது.இனி, இதுபோன்ற சம்பவங்கள் நிகழாதவாறு, என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பள்ளி, கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்படும். இதுபோல, வேறு சம்பவங்கள் நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரித்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உண்மை கட்டாயம் வெளிவரும்.தனியார் பள்ளிகள் போலி என்.சி.சி., முகாம் நடத்தியது குறித்து, தற்போது தான் விசாரணை துவங்கியுள்ளது. முடிவில் எந்தெந்த பள்ளிகளில், இதுபோன்ற போலி முகாம் நடத்தப்பட்டு உள்ளது என்பது தெரியவரும். நாங்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் தங்கி விசாரணை நடத்த உள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால், இரவு 7:00 மணிக்கு மேல், கலெக்டர் அலுவலகம் பின்புறமுள்ள அரசு பயணியர் மாளிகை வந்து புகார் தெரிவிக்கலாம். அவர்கள் விபரம், ரகசியம் காக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

எலி மருந்து தின்று என்கொயரிக்கு ஆஜர்!

கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை கூறியதாவது:மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான சிவராமன், தன் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், ஜூலை, 11ல் எலி பேஸ்ட் தின்று, தற்கொலைக்கு முயன்று, மருத்துவ சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். தற்போது, பாலியல் பலாத்கார வழக்கில், தான் கைதாக போகிறோம் என்ற பயத்தில், கைதாவதற்கு ஒரு நாள் முன், மீண்டும் எலி பேஸ்ட் தின்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். சிவராமனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவர்கள் பரிந்துரைபடி அவர், மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.அங்கு ஐ.சி.யு.,வில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவராமனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது நல்ல நிலையில் உள்ளார். அவரை, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை