கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று தமிழக சட்டசபை பேரவை நுாலகக்குழுவினர், மாவட்ட மைய நுாலகம், நெடுங்கல், ஆவத்தவாடி, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நுாலகங்களை ஆய்வு செய்தனர். நுாலகக்குழு தலைவர் மாதவரம் எம்.எல்.ஏ., சுதர்சனம் தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் மதுரவாயல் கணபதி, தியாகராய நகர் கருணாநிதி, அரூர் சம்பத்குமார், பெரியகுளம் சரவணக்குமார், முசிறி தியாகராஜன், துறையூர் ஸ்டாலின் குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட கலெக்டர் சரயு முன்னிலை வகித்தார்.மாவட்ட மைய நுாலகத்தில் ஆய்வின் போது, வாசகர்கள், போட்டி தேர்வர்கள் பேசுகையில், 'நுாலகத்தில் இடவசதி குறைவாக உள்ளதால் சிரமமாக உள்ளது. எனவே, போட்டி தேர்விற்கு படிப்பதற்கு மட்டும் தனி அறையும், கூடுதல் புத்தங்களும் வழங்க வேண்டும். நுாலக சுற்றுச்சுவர், இணையதளம் மூலம் புத்தங்கள் படிப்பதற்கு வைபை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்' என்றனர். போட்டி தேர்விற்கு கட்டடம் கட்டி தரப்படும் உட்பட அனைத்து கோரிக்கைகளும், 6 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என நுாலகக்குழு தலைவர் தெரிவித்தார். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில், சட்டசபை பேரவை செயலக நுாலக குழுவின் ஆய்வுக்கூட்டம் நடந்தது.கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஓசூர் மாநகராட்சி கமிஷனர் சினேகா, துணை கலெக்டர் பிரியங்கா, பொது நுாலக இணை இயக்குனர் இளங்கோ சந்தரகுமார், குழு அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட நுாலக அலுவலர் தனலட்சுமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.