ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சவுந்தர்யா, 20, என்ற கர்ப்பிணி, சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டிருந்தார். அவரை மேல்சிகிச்சைக்காக, 108 அவசரகால ஆம்புலன்ஸ் வாகனம், மூலம் நேற்று முன்தினம் இரவு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கம்பைநல்லுாரை சேர்ந்த பார்த்திபன், 41, என்பவர் ஓட்டிச் சென்றார். அதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மனைவி சந்தியா, 25, என்பவர் உதவியாளராக இருந்தார். உத்தனப்பள்ளி - ஓசூர் சாலையில் உப்பரதம்மண்டரப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே, அன்றிரவு, 11:30 மணிக்கு ஆம்புலன்ஸ் சென்றபோது, எதிரே வந்த டிராக்டர், ஆம்புலன்ஸ் மீது மோதியது. இதில், ஆம்புலன்ஸ் டிரைவர் பார்த்திபன், உதவியாளர் சந்தியா மற்றும் டிராக்டர் டிரைவரான ஓசூர் அரசனட்டியை சேர்ந்த பாபு, 35, ஆகிய, 3 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு வேறொரு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பி வைத்தனர். அதேபோல், காயமின்றி உயிர் தப்பிய கர்ப்பிணி சவுந்தர்யா, மாற்று ஆம்புலன்ஸ் மூலம், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.