| ADDED : ஆக 14, 2024 12:20 AM
மதுரை : இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு இழப்பீடு கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு: கச்சத்தீவை 1974 ல் இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்து கொடுத்தபின் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க முடியாமல் இடையூறுகளை சந்திக்கின்றனர். ஜூலை 30ல் இறுதி கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை அணி தோல்வியடைந்தது. இதனால் இலங்கை கடற்படை வீரர்கள் கோபமடைந்தனர்.ஜூலை 31 ல் ராமேஸ்வரத்திலிருந்து ஒரு விசைப்படகில் சென்ற மூக்கையா, முத்துமுனியன், மலைச்சாமி, ராமச்சந்திரன் நெடுந்தீவு அருகே மீன் பிடித்தனர். அப்படகின் மீது இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல் மூலம் மோதச் செய்து மூழ்கடித்தனர். மலைச்சாமி இறந்தார். ராமச்சந்திரனை காணவில்லை. இருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தனர்.மீனவர்கள் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக செயல்படுகின்றன. 1974 முதல் தற்போது வரை 500 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.ஒரு கோடி இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு மத்திய வெளியுறவுத்துறை செயலர், தமிழக கால்நடை, மீன்வளத்துறை முதன்மைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.